முதுகெலும்பு இல்லாதவர் ஜனாதிபதி மைத்திரிபால!– சாடுகின்றார் சுமந்திரன் எம்.பி

Report Print Kumar in அரசியல்

எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று கூறுபவனே முதுகெலும்புள்ளவனாவான். விசாரணைக்கு பயந்து ஓடும்போது தனக்கு முதுகெலும்பு உள்ளது என ஜனாதிபதி கூற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆண்டு இரண்டு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 41வது ஆண்டு நினைவு தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மாவட்ட சபைத் தலைவராக பதவி வகித்த செங்கலடியைச் சேர்ந்த எஸ்.சம்பந்தமூர்த்தி அவர்களின் 28வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன்,

2009ம் ஆண்டு மேமாதம் 19ம் திகதி போரின் இறுதிக்கட்டத்தில் பாரிய மனித உரிமை மீறல்களும் பாரிய சர்வதேச குற்றங்களும் இந்த நாட்டிலே இழைக்கப்பட்டன எனப் பல குற்றச்சாட்டுகள் மனித உரிiமைப் பேரவையை சென்றடைந்தன.

இலங்கையில் நடந்த இந்த சம்பவங்கள் சம்பந்தமாக ஒரு விஷேட கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு 2009ம் ஆண்டு மேமாதமே போர் முடிவடைந்து ஐந்து நாட்களுக்குள்ளே கூட்டத்தொடர் ஆரம்பமானது.

அந்த வேளையில் இலங்கை பல வாக்குறுதிகளை கொடுத்தது. இலங்கைக்கு பான் கீ மூன் வந்த போது மூன்று வாக்குறுதிகளையும் ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

அவற்றையெல்லாம் அவதானித்து உறுப்பு நாடுகள் இலங்கையின் பக்கம் சாய்ந்தன. இலங்கையை கண்டிப்பதற்கென கூட்டப்பட்ட விஷேட கூட்டத்தொடரிலே பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக இலங்கையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் அது நடைபெற்றது.வாக்குறுதிகள் வழங்குவது அரசியல்வாதிகளுக்கு சகஜமான விடயம். மகிந்த ராஜபக்ஸவும் மக்களுக்கு தாராளமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

ஆனால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்களா என்பது தெரியாது. நிறைவேற்றத் தவறினால் அடுத்த நாள் தண்டனை வழங்கப்பட மாட்டாது. சர்வதேச பொறிமுறைகள் அவ்வாறு வழங்கமுடியாது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் யுத்தக்குற்றச்சாட்டுகள் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. அரச படைகளினால் மனிதாபிமான சட்டத்திற்கு எதிராக ஐந்து குற்றங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு குற்றங்கள் நிரல்படுத்தப்பட்டிருந்தன. அதற்கு போதிய சான்றுகள் இருக்கின்றது. இது தொடர்பில் சர்வதேச விசாரணை செய்யப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையையோ சர்வதேச ஆதரவுடனான விசாரணையோ செய்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று கூறியதன் காரணமாக 2012ம் ஆண்டு இலங்கை தொடர்பில் முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் என்பது ஒரு சபையாகும். அங்கு வழக்கு நடாத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பாகும். ஐ.நா.சபை மூலம் மகிந்தவை சிறையில் அடைக்கலாம் என கருதுகின்றனர். அவ்வாறு அடைக்க முடியாது.

இது தொடர்பில் சரியான விளக்கத்தினை மக்களுக்கு வழங்காவிட்டால் அந்த மக்களை தொடர்ச்சியான ஏமாற்றப் பாதையிலே கொண்டு செல்லும் செயற்பாடுகளிலேயே நாங்கள் ஈடுபடுகின்றோம்.

2012ம் ஆண்டு அமெரிக்கா தீர்மானித்தை கொண்டு வருவதற்கு முன்பாக 2011ம் ஆண்டு கனடா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதனை திரும்ப பெற்றுக்கொண்டது. உறுப்பு நாடுகளின்ஆதரவு குறைந்த நிலையில் இருந்ததன் காரணமாக அது திரும்ப பெற்றுக்கொண்டது.

அதில் அந்த தீர்மானம் தோல்வியடைந்திருந்தால் இலங்கையின் கை ஓங்கிவிடும் என்பதற்காகவே கனடா அந்த தீர்மானத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது. வெற்றி பெறாது என்பதை உணர்ந்து நாங்கள் பின்வாங்குவது அந்த மக்களுக்கு செய்யும் சேவையாகும்.

எங்களுக்கு உள்ள ஆதரவு என்ன என்பதை அறிந்து செயற்பட வேண்டும்.அமெரிக்கா 2012ம் ஆண்டு எங்களை சந்தித்து நாங்கள் பிரேரணையொன்றை கொண்டு வருகின்றோம். நீங்கள் யாரும் அந்தப் பக்கம் வர வேண்டாம் என்று கூறினார்கள்.

நாங்கள் வல்லரசாக உள்ள போது இலங்கையில் உள்ள சிறிய கட்சியின் செயற்பாடுகளுக்கு இணங்கி நடந்து கொள்வதாக எழும் விமர்சனங்களை தவிர்த்துக் கொள்வதற்கே அந்த பணிப்புரையை எங்களுக்கு விடுத்தனர். அதனை நாங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் நாங்கள் இதனைக் கூறினோம்.அமெரிக்கா இதனைச் செய்கின்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதற்கு எதிராக அறிக்கையினை விடுத்தார். சம்பந்தனும் சுமந்திரனும் துரோகம் செய்து விட்டதாக அறிக்கை வெளியிட்டனர். எனக்கு கொடும்பாவி எரிக்க விடப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கறுப்பு கோட்டு போடப்பட்டு தொங்க விடப்பட்டது. இலங்கை உள்நாட்டு விசாரணை நடாத்த வேண்டும் என்று ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. எஇலங்கை அதனை செய்யவில்லை.

2013ம் ஆண்டு மீண்டும் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீண்டும் அதனை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இதுவே சர்வதேச பொறிமுறையாகும்.

கம்போடியாவில் 30 வருடத்திற்கு பின்பே போர்க்குற்ற விசாரண ஆரம்பித்தது என்ற உதாரணத்தை நான் கூறியதற்கு பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரண்டு தடவைகள் அவகாசம் வழங்கியும் இலங்கை தனது சுயாதீனத்தை பிரயோகித்து ஒரு விசாரணையை நடாத்ததன் காரணத்தினால் 2014ம்ஆண்டு உள்நாட்டு விசாரணையொன்று நடைபெறவேண்டும் அதற்கு சமாந்தரமாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இது தான் சர்வதேச முறை.ஐ.நா.மனித உரிமை சபையில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் இறைமையுள்ள நாடுகள். தங்களுக்கும் இந்த நிலைமை ஏற்படும் என்று தயக்கத்துடனேயே செயற்படும்.

அவ்வாறான நிலையில் இலங்கையில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.என்ன கருவியை நாங்கள் எதற்காக உபயோகிக்கின்றோம் என்பதை நாங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

சர்வதேச விசாரணையை மாயை என்றார்கள். அது நடந்து முடிந்து 2015ல் அறிக்கை வெளிவரவிருந்தது. அந்த வேளையில் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக அந்த அறிக்கையினை பின்போடுமாறு கேட்டார்கள்.

ஆறு மாதங்கள் பிற்போடப்பட்டது. அது பிற்போடப்பட்ட போது அனைத்தையும் இழந்து விட்டோம் என்று கதிரை ஒப்பாரி வைத்தவர்கள் ஏராளம்.பிற்போடப்பட்ட அறிக்கை 2015செப்டம்பரில் வெளியிடப்பட்டது. அது அறைகுறை அறிக்கையல்ல. முழுமையான அறிக்கை.

உலகத்திலே நிகழ்த்தப்பட்ட சர்வதேச விசாரணைகளிலே மிக உயர்நிலை விசாரணை இலங்கை சம்பந்தமாகவே நடத்தப்பட்டிருக்கின்றது. அதிலே சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு கலப்புப் பொறிமுறையின் மூலமாக நீதிமன்ற தண்டனை வழங்கும் பொறிமுறையில் செயற்படவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. விசாரணைக்கும் நீதிமன்ற பொறிமுறைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

விசாரணை முடிவிலே குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குங்கள் என்று சொன்னார்கள். அது சர்வதேச விசாரணையல்ல. அதனை கலப்புப் பொறிமுறை என்று சொன்னார்கள்.

அவர்களுடைய சிபாரிசு வருவதற்கு முன்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து வடிவிலே ஒரு கலப்புப் பொறிமுறையை கேட்டிருந்தோம். முழுமையான சர்வதேச விசாரணையை நாங்கள் கேட்கவில்லை. ஒரு கலப்புப் பொறிமுறையைத்தான் கேட்டிருந்தோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக இலங்கையை கொண்டு செல்ல முடியாது. முழுமையான சர்வதேச விசாரணையை நடத்தினாலும் அதற்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய தேவையில்லை.

நடக்கின்ற பொறிமுறை நிலைகொள்ளக் கூடியதாகவும் செயற்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பிடிவிறாந்து கொடுத்தால் பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு அந்தநாட்டு சட்டத்திலே மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும்.

உள்ளகப் பொறிமுறை இருந்தால் தான் அந்த நாட்டிலே அதனை செயற்படுத்த முடியும். அந்த நாட்டில் வாழ்கின்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியும்.

வெளிநாட்டு நீதிபதிகள்,வெளிநாட்டு வழக்கறிஞர்கள், வெளிநாட்டு வழக்கு தொடுநர்கள் இவர்கள் அனைவரும் பங்குபற்றுகின்ற ஒரு விஷேட நீதிமன்ற பொறிமுறையே கலப்பு பொறிமுறையாகும்.

இப்படியான ஒரு முறையே இலங்கையின் அனுசரணையுடன் ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

புதிய அரசாங்கமும் நாங்கள் இதை செய்வோமென வாக்குறுதி வழங்கினார்கள்.எங்களுடைய பேச்சுவார்த்தைகளிலே இலங்கையை இணங்கச் செய்வதற்காக சில விட்டுக்கொடுப்புகளை நாங்கள் செய்தோம்.

இலங்கையை இணங்கச் செய்வதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தினோம். ஆனால் அடிப்படையில் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. முழுமையாக எமது மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதான ஒரு பொறிமுறை அதற்குள் இருக்கின்றது என்று தெரிந்து கொண்டு நாங்கள் அதனை வரவேற்றோம்.

இலங்கை அதனை முழுமையாக பொறுப்பேற்று கையெழுத்திட்டது. அத்தீர்மானத்தை இலங்கை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றது என்பது குறித்து பதினெட்டு மாதங்களில் மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த அறிக்கைதான் பெப்ரவரி 10ம் திகதி வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் இலங்கை சிலசில விடயங்களை செய்திருக்கின்றது எனவும் பலவற்றை செய்யவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் சொல்லியிருக்கின்றார்.

இலங்கை அவை அனைத்தையும் செய்ய வேண்டும் செய்வதை கண்காணிப்பதற்காக தன்னுடைய அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவப்படவேண்டும் என்று அவர் சிபாரிசு செய்திருக்கின்றார்.

அவருடைய சிபாரிசின் அடிப்படையில் வருகின்ற 23ம் திகதி இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கின்றது.

துரதிஷ்டவசமாக சில கடிதங்கள் அவை அனைத்தையும் செய்யத் தேவையில்லை என கைச்சாத்திட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்தப் பொறிமுறை பலவீனமானதென்றும் அதனை கைவிடவேண்டும் என்றும் எழுதப்பட்டிருக்கின்றன.

இதனை கைவிட்டு இலங்கையை பொதுச்சபைக்கு அனுப்பி அங்கிருந்து பாதுகாப்பு சபைக்கு அனுப்பி அங்கிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அக்கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியான கடிதம் அனுப்பப்பட்டதையிட்டு வெட்கமாகவுள்ளது. ஏனெனில் அத்தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்கள் நிபுணத்துவம் மிக்கவர்கள். அது செய்யப்படவே முடியாததென அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

இந்தக் கடிதத்தினை அனுப்பி வைத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி சட்டவல்லுநர் ஒருவர் இதனை தெளிவாக சொல்லியிருக்கின்றார். இது செய்ய முடியாத விடயம் என அனைவருக்கும் தெரியும்.

சர்வ தேசத்துடன் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். சாத்தியமானவை எவையென எங்களுக்குத் தெரியும் என்கின்ற விடயம் அவர்களுக்குத் தெரிய வேண்டும். நகைப்பிற்கு இடமாக நாங்கள் மாற்றக்கூடாது.

ஐ.நாவால் தீர்ப்பு வழங்க முடியாது, தீர்மானம் மாத்திரமே வழங்க முடியும் - சுமந்திரன் எம்.பி

Comments