விமலின் சதுரங்க ஆட்டத்தின் இயக்குனர் யார்? வெளிவரும் உண்மைகள்!

Report Print Mawali Analan in அரசியல்
383Shares

நீண்ட நாட்களின் பின்னர் பிணை கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் வழக்கு மற்றும் பிணை போன்றன முன்னுக்கு பின் முரண்பட்ட விடயமாக மாறியுள்ளது.

தொடர்ந்தும் 87 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விமலுக்கு பிணை மறுக்கப்பட்டு வந்தது. உண்ணாவிரதம், உயர்மட்ட பேச்சு வார்த்தைகள் என பல தரப்பட்ட விடயங்களின் பின்னர் நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

“நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதியா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது”. என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

ஒருவகையில் விமலின் பிணையும் கூட இந்தக் கருத்தின் உண்மைத் தன்மையை இன்று வெளிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது “விமலின் மகளின் உடல் நிலையை கருத்திற் கொண்டு இந்த பிணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்”

இதே நிலை தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஏற்பட்டதா? அவர்களை விடுவிக்கக் கோரி அவர்களது குடும்பங்கள் பல வகையான போராட்டங்கள் செய்து வந்தன.

தொடர்ந்தும் செய்து வருகின்றன. எனினும் அவை எதுவுமே கருத்திற் கொள்ளப்பட வில்லை. அரசியல் கைதிகள் தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.

என்ன குற்றம் என்பது கூட தெரியாத நிலையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை பிணை வழங்கப்படவில்லை. இவ்வாறான ஓர் நிலை தொடருகின்ற போது.,

விமலின் குடும்ப நிலை கருத்திற் கொண்டு பிணை நிறைவேற்றப்பட்டிருப்பது பக்கசார்பான நீதியைக் காட்டுவதாக அவதானிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதே போன்று ஏனைய கைதிகளும் பிணை கோரினால் நிலை கேலிக் கூத்தாகிவிடும்.

இதேவேளை விமலின் வழக்கின் போது நீதிபதி கூறிய மற்றுமொரு விடயம்,

“வாகன முறைக்கேடுகள் தொடர்பிலான விபரங்கள் நிதி மோசடிப் பிரிவின் மூலம் நீதிமன்றத்திற்கு வழங்குவதில் காலதாமதங்கள் ஏற்படக்கூடும். அது வரையில் சந்தேக நபரை சிறையில் வைத்திருப்பதற்கு அனுமதி இல்லை” என்பதே.

இந்த விடயத்தை 87 நாட்களின் பின்னர் நீதிமன்றம் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடயம். இதன் மூலம் இதன் பின்னணியில் நடத்தப்பட்டுள்ள அரசியல் அழுத்தங்கள் புலப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க விமலின் பிணை நிமித்தம் பிரதமர் அழுத்தங்கள் மேற்கொண்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அதனைத் தொடர்ந்து நேற்று அவசரமாக பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த பிணை இதற்கு முன்னரே வழங்கியிருக்கலாம் ஆனால் செய்யப்பட வில்லை.

எனினும் இந்த அழுத்தங்கள் மற்றும் பிணை பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனான கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சுவார்த்தையின் பின்னரே ஏற்படுத்தப்பட்டதா? பிரதமரும் இந்த நாடகத்தில் கூட்டா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது.

பிரதமருக்கு நீதிமன்றங்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்க முடியுமானால், அரசியல் உள் நோக்கங்களே இந்த கைதில் இடம் பெற்றதா என்ற பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது.

குறிப்பாக பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்ட விடயம் தொடர்பில் கூற முடியாது என வாசுதேவ நாணயக்கார வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அதன் பின்னர் நீதி நிலைப்பாடுகள் மாற்றம் அடையத் தொடங்கியது.

அது மட்டுமல்லாது சிறைக் கைதியின் போராட்டம் அல்லது அவரது குடும்ப நிலைகளை அடிப்படையாக கொண்டு பிணை வழங்கப்படுவது முறையற்றது என அரசு தரப்பு தெரிவித்து வந்தனர்.

அதன் பின்னர் ஓர் மறைமுக பேச்சுவார்த்தை இடம் பெற்றதை ஒரே நாளில் விமலுக்கு பிணை என்பன சந்தேகத்திற்கு இடமான விடயம் என்றே கூறப்படுகின்றது.

மேலும், விமலின் உடல் நிலை வைரஸ் தொற்றுதலால் பாதிப்படைந்துள்ளதாக கூறியதோடு இவரால் இன்று நீதிமன்றத்திற்கு வருகைத் தருவதும் சிரமம் என்றே கூறப்பட்டது.

ஆனாலும் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இன்றி இன்று விமல் ஆரோக்கியத்துடன் நீதிமன்றத்திற்கு வந்து சென்றுள்ளார். இது விமலின் பிணை நாடகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த முறை விமலின் மகளை காரணம் காட்டி பிணை கோரப்பட்டபோது மறுப்பு தெரிவிக்கப்பட்டது இந்த முறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறைவாசத்தின் போது விமல் கூறியது “நாட்டில் முறையற்ற நீதி நடைபெறுகின்றது, நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வருகின்றன, அதனாலேயே உண்ணாவிரதம் மேற்கொள்கின்றேன்”

அதன் பின்னர் பிணையில் வெளிவந்த விமல் நேற்று கூறியது “நாட்டில் நீதிமன்றங்கள் நிலைதவறாது செயற்படுகின்றன. நீதியை நம்புகின்றேன், யாருடைய பரிந்துரையிலும் நான் வெளியே வர வில்லை”

இந்த முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளும் விமலின் அரசியல் வேடங்களை வெளிப்படையாக காட்டி விட்டதாக கூறப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் விமல் போலவே கைது செய்யப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட பலருக்கு இரண்டொரு நாளில் பிணை கொடுக்கப்பட்ட போதும், விமல் தொடர்ந்தும் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த குழப்பங்களில் விமல் மீது இருந்த போலி கடவுச் சீட்டு வழக்கு, அவர் வீட்டில் மரணமடைந்த இளைஞன் தொடர்பிலான வழக்கு அனைத்தும் திசை திரும்பிப் போனது.

அது மட்டும் அல்லாது விமல் தொடர்பில் கூச்சலிட்ட மகிந்த உட்பட அனைவரும் அமைதியாகிவிட்டதாகவும். இந்த நாடகத்தின் பின்னணியில் அரசும் செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இவை அனைத்தையும் பார்க்கும் போது விமலின் கைது, பிணை இரண்டுமே அரசியல் விளையாட்டுக்காக மக்களை திசைதிருப்பும் செயலாகவே நோக்க முடியும் எனவும்.,

இது அரசு மற்றும் விமல் அனைவரும் இணைந்து நடத்திய சிறை நாடகம் என்பதும் இப்போது வெளிப்படையாகி விட்டது என்பது தென்னிலங்கை புத்திஜுவிகளின் கருத்து.

Comments