இலங்கையின் தேசிய அரிசி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் ஜய ஸ்ரீ மாபோதி புனித வெள்ளரச மரத்திற்கு அருகில் நடைபெற்றது.
சம்பிரதாயபூர்வமாக பெரும் போக நெல் அறுவடையில் முதலில் அறுக்கப்படும் நெல்லில் இருந்து எடுக்கப்படும் அரிசியை புனித வெள்ளரசு மரத்திற்கு படைக்கும் இந்த நிகழ்வு பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் ஆலோசனையின் பிரகாரம் விவசாய அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த சம்பிரதாய நிகழ்வில் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
உரிய காலத்தில் மழை பெய்ய வேண்டும், விவசாயத்தில் நாடு தன்னிறைவு அடைந்து, சுபீட்சமான பொருளாதாரம் நாட்டுக்கு கிடைக்க வேண்டும் என வேண்டி இங்கு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் தேசிய அரிசி பாத்திரம் ஜனாதிபதியினால், பௌத்த பிக்குமாருக்கு பூஜிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.