ஜெயலலிதா மரண மர்மம்: பிரதமர் மோடி மௌனம் ஏன்?

Report Print Samy in அரசியல்
220Shares

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் சர்ச்சை, ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கால் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டாலும், ஒரு மாதத்துக்குப் பின்னர் உடல்நிலை மோசம் அடைந்ததாகவும், நுரையீரல் தொற்று, உடலில் அதிக சர்க்கரை, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, அடுத்த நாள் டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்றத்திலும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய வருவாய்த் துறை பணியில் (ஐ.ஆர்.எஸ்) உள்ள அதிகாரி பாலமுருகன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

சுங்கவரி, ஆயத்தீர்வை மற்றும் சேவை வரிகள் தீர்ப்பாயத்தின் உதவி ஆணையராக பதவி வகிக்கும் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 10 நாட்களுக்குப் பிறகே எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்த பின் அவரை, தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் சி.வித்யாசாகர் ராவ், மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்காமல் திரும்பினார். ஆளுநர் கொண்டுசென்ற பழங்கள் அடங்கிய கூடை, யாரோ ஒருவரிடம் வழங்கப்பட்டது. பின்னர் ஆளுநர் அளித்த அறிக்கையில், ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு மாநில முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டால், பிரதமர் என்ற முறையில் மோடி, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் அல்லது தமிழக ஆளுநர் மூலமாக, உடல்நலம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை கேட்டிருக்கலாம். ஆனால் மோடி அவ்வாறு எந்த அறிக்கையும் கோரவில்லை.

மாநில அரசு நிர்வாகத்தை நடத்தும் அளவுக்கு முதல்வரின் உடல்நிலை உள்ளதா? அப்படி இல்லாத பட்சத்தில், அரசியல் சட்டப்படி, அரசு நிர்வாகம், வேறு ஒருவரிடம் வழங்கப்பட வேண்டுமா? என்பதை அவர் கேட்டறியவில்லை.

ஆளுநரிடம் இருந்து அதுபோன்ற அறிக்கையையோ அல்லது மரியாதை நிமித்தமாக முதல்வரைத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலம் பற்றி விசாரிக்கவோ இல்லை.

அதேபோல், ஒரு முதல்வரின் உடல்நிலை, ஆட்சி நிர்வாகத்தைக் கவனிக்கக்கூடிய அளவுக்கு உள்ளதா என்பதை தமிழக ஆளுநரும் கேட்டு அறிந்து, மாற்று ஏற்பாடு செய்வதற்கு எந்த முயற்சியும் அப்போது எடுக்கவில்லை.

அப்போலோ மருத்துவமனைக்கு ஆளுநர் இரண்டுமுறை சென்றபோதும் ஜெயலலிதாவை ஆளுநர் பார்ப்பதற்கு, மருத்துவமனை நிர்வாகமோ அல்லது வேறு யாருமோ தடுத்திருக்க முடியாது.

ஆனால், உண்மையில் ஆளுநர் லட்சுமண ரேகை என்ற கோட்டைப் போட்டுக்கொண்டு, அதைத் தாண்டி வேறு எவரும் சென்று, ஜெயலலிதாவைப் பார்க்க முடியாது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.

முதல்வர் வகித்து வந்த துறைப் பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதா பரிந்துரைத்தார் என்பதற்கு எந்தவித ஆவணங்களும் ஆளுநரிடம் இல்லை.

இதுபோன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடை, ஜெயலலிதா இறந்த நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பார் அல்லது இரண்டு நாள்கள் கழித்து உயிரிழந்திருப்பார் என்பதுதான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையைப் பொறுத்தவரை, "நீர்ச்சத்து குறைபாடு நீங்கி, செப்டம்பர் 28-ம் தேதி அன்று ஜெயலலிதா வழக்கமான உணவை சாப்பிடத் தொடங்கினார் என்றால், அவரின் நெருங்கிய உறவினரான தீபாவைக் கூட பார்க்க மருத்துவமனை நிர்வாகம் ஏன் அனுமதிக்கவில்லை?

மேலும் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் என்றால், மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்யாதது ஏன்?

ஜெயலலிதாவுக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக அவரை வெளிநாடு கொண்டுசெல்ல மருத்துவமனை ஏன் அனுமதிக்கவில்லை?

அக்டோபர் 3-ம் தேதிக்குப் பின் அவரது உடல்நிலை மோசமானது தொடர்பான விளக்கம் அளிக்காதது ஏன்?" போன்ற கேள்விகளையும் அந்த மனுவில் மனுதாரர் எழுப்பியுள்ளார்.

பாலமுருகன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வு, இந்த வழக்கை ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பொதுநல மனுக்களுடன் சேர்த்து ஜூலை 4-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தது.

முன்னதாக, இந்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அரசு வழக்கறிஞர் எம்.கே. சுப்பிரமணியன் தனது வாதத்தின்போது குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருப்பதால், இந்தப் பிரச்னை மேலும் சூடு பிடித்துள்ளது.

- Vikatan

Comments