மக்களின் காணிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்! சுமந்திரன்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்
44Shares

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படையினருடன் தமிழ் தேசியகூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய வடகிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகளில் அமைந்துள்ள படை முகாம்களுக்கு காணி உரிமையாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இதன்படி நாளை முல்லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாமிற்கு மக்களுடன் செல்லவுள்ளதாகவும், 20ம் திகதி நாளை மறுதினம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள படை முகாம்களுக்கு செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயின் அலுவலகத்தில் புதுவருடத்தை ஒட்டி சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் போனவர்கள் விடயம், பட்டதாரிகளின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

காணி விடுவிப்பு மற்றும் அதற்காக நடக்கும் போராட்ட ங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

இதனடிப்படையில் படையினர் வசம் உள்ள மக்களுடைய காணிகள் தொடர்பாக அந்தந்த படை முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று மக்களுடனும் படை அதிகாரிகளுடனும் பேசி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்று முல் லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று பேசவுள்ளோம்.

தொடர்ச்சியாக நாளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் சந்திப்புக்களை நடத்தி அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத்திற்கும் செல்லவுள்ளோம்.

இறுதியாக எந்தெந்த காணிகள் என்னென்ன அடிப்படையில் எப்போது விடுவிக்கப்படலாம்? என்பது தொடர்பான அறிக்கையினை ஜனாதிபதிக்கு சமர்பிக்க உள்ளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் சட்ட முதல் வரைபு கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தது.

இந்நிலையில் அந்த சட்டமூலத்தில் ஜே.வி.பி ஒரு திருத்தத்தை கோரியிருந்தது. இதற்கிடை யில் இந்த விடயம் தொடர்பான ஜனாதிபதியை சந்தித்து நாங்கள் கேட்டுள்ளோம்.

அவர் எமக்கு கூறியது ஜே.வி.பி கோரியுள்ள திருத்தம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த திருத்தம் நாடாளுமன்றுக்கு வந்து நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதாக எனவே அது நடைமுறைப்படுத்தப்படும். அது தொடர்பாக நாங்கள் அரசாங்கத்துடன் அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளோம் என்றார்.

மேலும் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் குறித்து பிரதமருடன் சந்திப்பு ஒன்றை ஒழுங்கமைத்து கொடுத்திருந்தோம். அதில் பட்டதாரிகள் கலந்து கொண்டார்கள்.

அதனடிப்படையில் அரச திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை அடையாளம் கண்டு அதனடிப்படையில் நியமனங்களை வழங்க பிரதமர் இணங்கியதுடன் 3 வாரங்கள் கால அவகாசத்தைஅவர் கேட்டிருந்தார்.

அந்த கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், பெறப்பட்ட வெற்றிடங்கள் தொடர்பான தகவல்கள் உரியதரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படை யில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனம் வழங்கப்படும் என்றார்.

Comments