காணாமல்போனோர் அலுவலகச் சட்டம் : பாதுகாப்புத் தரப்பின் ஆட்சேபனைகளுக்கு ஜனாதிபதி பதில் தருவார்

Report Print Rakesh in அரசியல்
43Shares

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் தொடர்பில் தாம் எழுப்பிய ஆட்சேபனைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் பதில் வழங்குவார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில், குறிப்பாக இராணுவ முகாம்களுக்குள் தேடுதல் நடத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, பாதுகாப்புத் தரப்பினர் ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தனர்.

காணாமல்போனோர் அலுவலக சட்டத்தில் எந்த விடயங்களில் தமக்கு ஆட்சேபனைகள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டு 15 பக்கத்திலான ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பாதுகாப்பு அமைச்சின் செயலர் கையளித்திருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் கையளிக்கப்பட்ட ஆவணத்தை, அவர்களின் ஆட்சேபனைகளை ஜனாதிபதி நிராகரித்து விட்டார் என்று தெரியவருகின்றது.

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் அமைச்சரவைத் தீர்மானம் முன்வைக்கப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) திருத்தம் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருந்தது. வேறு திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பாதுகாப்புத் தரப்பினரின் ஆட்சேபனைகளை ஜனாதிபதி நிராகரித்திருந்தமையாலேயே அந்தத் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிருந்து தெரியவந்தது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் குறித்த கொழும்பு ஊடகம் கேட்டபோது, அவ்வாறு நிராகரிக்கப்படவில்லை. விரைவில் பதில் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

Comments