அமைச்சரவை இணைப்பேச்சாளராக சு.கவின் சார்பில் தயாசிறி நியமனம்

Report Print Rakesh in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்கவுள்ளார். அவரின் பங்குபற்றலை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக இருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சுப் பதவியை வகிப்பவர்களுக்கே அமைச்சரவைப் பேச்சாளர் பதவி வழங்கப்படுவது இலங்கை அரசியலில் வழமையாக இருந்தது. மஹிந்த ஆட்சியின்போது ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெலவே அமைச்சரவைப் பேச்சாளராகவும் செயற்பட்டு வந்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கயந்த கருணாதிலக்கவிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது அவரிடமிருந்து ஊடகத்துறை அமைச்சு பறிக்கப்பட்டு அது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சரை இணைப்பேச்சாளர் பதவியில் அவர் நீடிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அமைச்சரவை இணைப்பேச்சாளராக செயற்பட்டுவந்த சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அமைச்சரவை இணைப்பேச்சாளராகச் செயற்படுவார் எனத் தெரியவருகின்றது.

இன்றைய தினம் சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதால் அடுத்த வாரம் முதல் அவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடுகளில் பங்கேற்பார் என அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

தொழிற்சங்க நடவடிக்கையின்போது அத்தியாவசிய சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை முன்னெடுப்பதற்காக விசேட செயலணியொன்று உருவாக்கப்பட்டு அதை வழிநடத்தும் பொறுப்பை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்த கருத்து இலங்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், தேசிய அரசுக்குள் குழப்பநிலையும் ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியைச் சந்தித்து, சு.கவின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சு.கவின் சார்பில் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.