சஷி வீரவங்சவின் கடவுச்சீட்டு விவகாரத்தில் பொலிசாருக்கு எச்சரிக்கை!

Report Print Aasim in அரசியல்

சஷி வீரவங்சவின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன நீதிமன்றப் பொறுப்பில் இருந்த நிலையில் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறித்து பொலிசார் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச இரண்டு அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதாகவும், போலியான ஆவணங்கள் கொண்டு அவற்றைத் தயாரித்திருப்பதாகவும் குற்றம் சாட்டி வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்களாக அவரது கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பவற்றைக் கைப்பற்றி குற்றப் புலனாய்வுப் பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பன நீதிமன்றப் பொறுப்பில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிசாரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும் சம்பவம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது பொலிசார் அசமந்தமாக தவறு செய்து விட்டு அதன் மூலம் நீதிமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் லால் ரணசிங்க குற்றப் புலனாய்வுப் பொலிசாரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

குறித்த பொருட்கள் நீதிமன்ற சிறைச்சாலை அதிகாரியின் பொறுப்பில் இருக்கும் நிலையில் பொலிசார் அவற்றை பிரதம நீதிமன்றப் பதிவாளரிடம் கோரியுள்ளனர். எனினும் அவர் குறித்த தடயப் பொருட்கள் தன்வசம் இல்லை என்று பதிலளித்திருந்தார்.

இதன் காரணமாகவே சஷியின் அடையாள அட்டை, கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதனை சுட்டிக்காட்டிய நீதிபதி லால் ரணசிங்க, பொலிசாரின் அசமந்த போக்கினால் பொதுமக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்