மகிந்தவின் திருட்டை நிரூபித்தால் பதவி விலகுவேன்! சவால் விடும் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Rakesh in அரசியல்

"மஹிந்தவோ அல்லது அவரது குடும்பத்தாரோ திருடிய பணம் டுபாய் வங்கியில் உள்ளதை இந்த அரச தரப்பினர் ஆதாரத்துடன் நிரூபித்தால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகத் தயார் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மேலும் கூறுகையில்,

"மஹிந்த ஆட்சி ஊழல்மிக்க ஆட்சி என்று கூறியே எமது ஆட்சியை இவர்கள் கவிழ்த்தனர். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே திருட்டில் இறங்கிவிட்டனர். மத்திய வங்கி பிணைமுறி மோசடி காரணமாக இந்த நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துகொண்டு செல்கின்றது.

இந்த மோசடியை மேற்கொண்ட அர்ஜுன மகேந்திரன் மற்றும் அர்ஜுன அலோசியஸிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்தப் பணம்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்தப்பட்டது. மஹிந்த திருடர் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் திருடிக்கொண்டு இருக்கின்றனர்.

மஹிந்த திருடினார் என்று கூறும் இவர்கள் ஒரு திருட்டையும் ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. அங்கு பணம் உள்ளது என்று கற்பனையில் கூறி வருகின்றனர். டுபாய் வங்கியில் மஹிந்த திருடிய 18.5 பில்லியன் அமெரிக்க டொலர் இருப்பதாக ராஜித சொன்னார்.

முடிந்தால் மஹிந்த திருடினார் என்று அந்த வங்கியில் இருந்து ஒரு டொலரையாவது மீட்டெடுத்து வாருங்கள். அப்படிச் செய்தால் எனது எம்.பி. பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் இராஜிநாமா செய்வேன். ஒருபோதும் உங்களால் அப்படி முடியாது. அவர் திருடினார் என்று சொல்லிச் சொல்லியே ஆட்சி செய்வீர்கள். மக்களை ஏமாற்றுவீர்கள்.

அடுத்த மே தினத்துக்கு முன் ராஜபக்ஷ குடும்பத்தைக் கைதுசெய்துவிடுவோம் என்று ராஜித கூறுகின்றார். முடிந்தால் மத்திய வங்கியைக் கொள்ளையடித்த அர்ஜுனன் அலோசியஸை அடுத்த மே தினத்துக்கு முன் கைதுசெய்து காட்டுங்கள்.

திருடனைப் பிடிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு வந்த அரசு இன்று திருடர்களுடன்தான் சேர்ந்து பயணிக்கின்றது. மஹிந்தவைத் திருடர் என்று சொல்லச் சொல்ல அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதை இந்த அரசு நினைவில் வைத்துக்கொள்ளட்டும்" என்றார்.