மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச செயலகங்கள் பராமரித்தல் அவசியம்!

Report Print Rakesh in அரசியல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுத் தூபி போன்றவற்றை மீளப் புனரமைத்துப் பிரதேச செயலகங்கள் பராமரிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

"யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி போன்றவற்றை புனரமைப்புச் செய்யவேண்டும்.

அதன் பின்னர் அவற்றை குறித்த பிரதேசத்தில் உள்ள பிரஇதேச செயலகங்கள் பராமரிக்க வேண்டும். அத்துடன் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவுத் தூபியை யாழ்ப்பாணம் மாநகர சபை பராமரிக்கவேண்டும் என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்" - என்றார்.

இதற்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

"யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இணைத் தலைவர்களில் இரண்டு பேர் குறித்த கூட்டத்துக்கு சமுகமளிக்கவில்லை. இந்த விடயம் முக்கிய விடயம் என்பதால் இதனை அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனைவரும்கலந்தாலோசித்து நல்லதொரு முடிவை எடுப்போம்" எனத் தெரிவித்தனர்.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கோரிக்கை அடுத்த கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.