கொன்றிருந்தால் இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குங்கள்!- காணாமல் போனோரின் உறவுகள் வலியுறுத்து

Report Print Rakesh in அரசியல்

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள், இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே, அதற்குரிய ஆதாரங்களையும் வெளியிட வேண்டும்.இராணுவம் அவர்களைக் கொலை செய்து விட்டதென்றால், குற்றத்தை மேற்கொண்டவர்களுக்குத் தண்டனையை வழங்க வேண்டியது தானே.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி வடக்கு, கிழக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்ற அவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராஜபக்ச ஆட்சியில் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துத் தொடர்பில் வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் அவர்களது உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

சந்திரிகா தான் தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஆதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த ஆதாரத்தை வெளியிட வேண்டும். உண்மையில் அவரிடம் ஆதாரம் இருந்திருந்தால், அதனை ஏன் இவ்வளவு நாளும் வெளிப்படுத்தவில்லை.

நாம் இராணுவத்திடம் ஒப்படைத்த உறவுகளை அவர்கள் கொன்று விட்டார்களென்றால், குற்றவாளிகளுக்கு அரசு தண்டனை கொடுக்க வேண்டியது தானே.

பின்னர் ஏன் வெளிநாடுகளுக்குச் சென்று, காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கின்றோம், விசாரணை நடத்துகின்றோம் என்று கூற வேண்டும்?

சந்திரிகா அம்மையார் தெரிவித்த இந்தக் கருத்துக்கு எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்கள்.