இலங்கையை அரவணைத்தது அமெரிக்க அரசு! 350 மில்லியன்கள் உதவி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 350 மில்லியன்களை வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலர் வீடுகளை இழந்தும், சொத்துக்களை இழந்தும் நிர்க்கதியான நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நிதியினைத் திரட்டிவருவதுடன், நாடு முழுவதிலும் உள்ள மக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பொருட்களை திரட்டி வழங்கி வருகின்றனர்.

இதேவேளை, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இலங்கை இந்த அனர்த்தத்தில் இருந்து மீள்வதற்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது.

இதன் அடிப்படையில் தற்பொழுது அமெரிக்க அரசாங்கமும் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியாக 350 மில்லியன்களை வழங்கியுள்ளது.

இந்த உதவித் தொகையின் மூலமாக பாதுகாப்பான குடிநீர், சுகாதார உபகரணங்கள், அவசரகால பாதுகாப்பு பொருட்கள், வீட்டு பழுதுபார்ப்பு கருவிகள், மற்றும் நோய்களைத் தடுக்க கடுமையான சுகாதார பராமரிப்பு சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கு இவ் உதவித் தொகை பயன்படும்.

இதேவேளை, சர்வோதய, இலங்கை அரச சார்பற்ற மற்றும் தொண்டு நிறுவனம் மூலம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா தூதுவர் அடுல் கெசாப், கடந்த கால வரலாற்றில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நீண்ட நட்புறவும் பிணைப்பும் இருக்கிறது.

இரு நாடுகளும் எப்பொழுதும் தேவைப்படும் காலங்களில் நெருக்கமான உறவினைக் கொண்டிருப்பதோடு அனைத்து உதவிகளையும் பகிர்ந்து கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இலங்கையின் இயற்கை அனர்த்த நிலைமையை கண்காணித்து மேலும் தேவைகளை அடையாளம் கண்டு, இலங்கை அரசாங்கத்தோடு பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.