விஜேதாசவுக்கு நீதித்துறை தொடர்பில் தெளிவில்லை! சட்டவல்லுனர்கள் விமர்சனம்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவுக்கு நீதித்துறை தொடர்பில் போதிய தௌிவின்மை காணப்படுவதாக சட்டவல்லுனர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான முக்கிய வழக்குகளின் விசாரணைகள் மந்தகதியில் மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து தற்போது அமைச்சர் விஜேதாசவின் நீதியமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களே பொறுப்பு என்றும் அதில் தலையிடுவது நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பாதிப்பானது என்றும் விஜேதாச ராஜபக்‌ஷ தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.

எனினும் இது தொடர்பாக கருத்து வௌியிட்டுள்ள சட்டவல்லுனர்கள் விஜேதாச சிறுபிள்ளைத்தனமாக கருத்து வௌியிடுவதாகவும், நீதித்துறை நிர்வாகம் மற்றும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் அவர் போதிய தௌிவற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வழக்குகளின் தீர்ப்பு தொடர்பில் தலையிடுவதே நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்பதுடன் வழக்கு விசாரணைகளின் தாமதத்தை நீக்கி விரைவுபடுத்தல் நிர்வாக ரீதியான நடவடிக்கை என்பதுடன் நீதியமைச்சுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் வழக்கு விசாரணைகளின் தாமதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பொதுமக்களும் கூட கேள்வியெழுப்பும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாகவும் சட்டவல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே விஜேதாச ராஜபக்‌ஷ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.