பண்பாடு, தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நாடாகவே அடுத்த தேர்தலை எதிர்கொள்வோம்! கயந்த

Report Print Aasim in அரசியல்

பண்பாடு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடாகவே இலங்கை அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் என்று அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

கடந்த தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி நாட்டு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் எதிர்வரும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் கடந்த இரண்டு வருட காலத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய வகையிலான குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியுள்ளது .

அத்துடன் தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் வகையில் நட்டமடையக் கூடிய எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுப்பதில்லை.

கடந்த அரசாங்கம் அவ்வாறான செயற்திட்டங்களை ஆரம்பித்து பொதுமக்களின் வரிப்பணத்தை பெருமளவில் வீணாக்கியிருந்தது.

நாட்டை பண்பாடு மற்றும் நவீனமாற்றங்களில் முன்னேற்றமடைந்த நாடாக அபிவிருத்தி செய்து அவ்வாறான நவீன தொழில்நுட்ப ரீதியான வழிமுறைகளின் ஊடாகவே அடுத்த தேர்தலின் ​போது நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்படும்.

எரிபொருள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு அரசாங்க ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதன் ஊடாக நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.