மஹிந்த காலத்து 7 அரச நிறுவனங்களின் பாரிய மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தி

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஏழு அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன.

ஏழு அரச நிறுவனங்களில் கோடிக் கணக்கான ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடிகள் தொடர்பில் பாரிய மோசடி, ஊழல் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளன.

இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளார்.

அறிக்கைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனவும் சட்ட மா அதிபர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், மீன்பிடித்துறை அமைச்சின் மீன்பிடித்துறை துறைமுக கூட்டுத்தாபனம், இலங்கை போக்குவரத்துச் சபை, மலையக அபிவிருத்தி அதிகாரசபை, நுகர்வோர் விவகார அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.