முதலமைச்சருக்கு பக்க பலமாக நிற்க வேண்டிய தேவை உள்ளது: ஜீ.குணசீலன்

Report Print Ashik in அரசியல்

வடமாகாண சபையின் மிகுதி காலம் மிகவும் குறைந்த காலமாக இருப்பதனால் இருக்கின்ற காலத்தினுள் சரியான திட்டங்களை மேற்கொள்ள சகலரது ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை முதலமைச்சரினால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சுகாதார, சுதேச வைத்திய துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு அமைச்சானது என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஆயுற் காலத்தின் இறுதிக்கட்டத்தில் இவ்வாறான மாற்றத்தின் ஊடாக சுகாதார அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காலம் குறுகியதாக இருந்தாலும், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களினுடைய நிலை என்ன? இருக்கின்ற காலத்துக்குள்ளே முடிக்கப்பட வேண்டிய திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை சரியான முறையில் முடித்து வைக்க வேண்டிய தேவையுள்ளது. இவ் வருடத்துக்கு என சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் இவ் வருடத்துக்குள் முடிவடைவதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு சரியான காலத்துக்குள் அவற்றை நிறைவுக்கு கொண்டு வர வேண்டிய கடமை என்னிடம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆகவே விரைந்து செயற்பட வேண்டிய ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். புதிதாக உள் நுழைந்துள்ளமையினால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவர்களின் உதவியோடு வினைத்திறனான செயல் திட்டங்களை கொண்டு இறுதி வருடத்தை வெற்றிகரமாக முடித்து விட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

அந்த வகையில் மாகாண சபையின் இறுதி காலத்தில் முதலமைச்சருக்கு பக்க பலமாக நிற்க வேண்டிய தேவை எங்களுக்குள்ளது.

அந்த வகையில் ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன். சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒத்துழைப்பு எனக்கு தேவைப்படுகின்றது. அவர்களின் ஒத்துழைப்போடு பணிகளை செய்து முடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.