சம்பந்தன் நேற்று பிறந்த குழந்தை அல்ல! ஐ.நா தலையிட வேண்டும் என கேட்பதன் அர்த்தம் என்ன?

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

ஆரம்பத்தில் இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் வேண்டாம் எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தற்போது வெளிநாடுகள் தலையிட வேண்டும், விசேடமாக ஐ.நா தலையிட வேண்டும் என கூறுவதன் அர்த்தம் என்ன? என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கேட்கப்பட்ட போது, இலங்கை அரசு அதனை மறுத்து உள்ளக விசாரணை பொறிமுறையை கேட்ட போது.

அதனை ஒப்புக் கொண்டு அன்று இலங்கை அரசுக்கு சாதகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நடந்து கொண்டார்.

ஆனால் இன்று வெளிநாடுகள் தலையிட வேண்டும், விசேடமாக ஐ.நா தலையிட வேண்டும் என கேட்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? தமிழ் மக்களை ஏமாற்றுவதா? அல்லது அரசாங்கத்தை சரியாக புரிந்து கொள்ளாமையா?

சம்பந்தன் நேற்று பிறந்த குழந்தை அல்ல, அவர் இலங்கை சுதந்திரமடைய முன் பிறந்தவர், பல்வேறு அரசாங்கங்களை பார்த்தவர். எனவே அவருக்கு இந்த அரசாங்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.” என குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குறுதியும்,

புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்ட சமஷ்டி மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற பிரதான விடயங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதேபோல் 2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டுவரை கால அவகாசம் கேட்டிருந்தார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு மே மாதம் அக்கரைப்பற்று பகுதியில் நடைபெற்ற மே தின நிகழ்வில் 2 வாரங்கள் கால அவகாசம் கேட்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்ட கால அவகாசத்திற்குள் ஒன்றுமே மாற்றமடையவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி சொல்கிறார், படையினரை விசாரிக்க காலம் கனியவில்லையாம், குற்றவாளிகளை விசாரிக்க காலம் கனிய வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு காலம் தேவை?

சாதாரண குற்றவாளிகளை துரத்தி, துரத்தி பிடிக்கப்படுகின்றார்கள். ஆனால் இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்ற பாரிய குற்றங்களை செய்திருக்கின்றது.

அவர்களை கைது செய்ய அல்லது விசாரிக்க காலம் கனிய வேண்டுமாம். மேலும் சர்வதேச நீதிபதிகள் பார்வையாளர்களாக வரலாம் ஆனால் நீதிபதிகளாக வர முடியாது என புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறுகிறார். அதையே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கூறுகின்றார்.

மேலும் புதிய அரசியலமைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழரசு கட்சியின் இரு உறுப்பினர்கள் மட்டுமே செயற்படுகின்றார்கள்.

மற்றைய அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுடைய கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை. எனவே மற்றைய அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

20ஆம் திருத்தம் தொடர்பாக,

20ஆம் திருத்தச் சட்டம் வரவுள்ளது. இதில் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம். இங்கே அதிகாரப்பகிர்வு தேவை என போராடியவர்கள் தமிழர்கள் மட்டுமே.

அந்த வகையில் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஊடாக மாகாண சபைகள் உருவாக்கப்படுவதற்காக அதிகம் பாடுபட்டவர்கள் தமிழர்கள்.

இவர்களின் நிலை இவ்வாறிருக்க நாடாளுமன்றம் தாங்கள் நினைத்த நேரத்தில் மாகாண சபைகளை கலைத்து விட்டு நினைத்த நேரத்தில் தேர்தலை நடத்துவதன் ஊடாக மாகாண செயற்பாடுகளிலும் தலையிடுவதற்காக முயற்சிக்கின்றது.

இதனால் ஊவா மாகாணம் மேற்படி சட்டமூலத்தை ஏற்கனவே நிராகரித்திருக்கின்றது. இதேபோல் வடமாகாணம் அதனை நிராகரிக்கும் என முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.

இந்த நிலையில் தமிழ் மற்றும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Latest Offers