தலதாவின் கண்கள் கட்டப்படவில்லை, உடனடியாக பதில் வேண்டும்: மஹிந்த அணி கேள்வி

Report Print Steephen Steephen in அரசியல்

தொழில் ரீதியான சகாவான தலதா அத்துகோரளவுக்கு நீதியமைச்சர் பதவி கிடைத்தமைக்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் தலதா அத்துகோரளவுடன் எமக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவுமில்லை. அவரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு கேள்வி மட்டுமே எமக்குள்ளது.

நீதியமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனையாக நீதிமன்றத்திற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அழுத்தம் கொடுக்க இணங்கினாரா இல்லையா? என்பதே அந்த கேள்வி.

இந்த கேள்வி என்னுடைய கேள்வியல்ல, முழு நாட்டினதும் கேள்வியாகும்.

நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு அழுத்தங்களை கொடுக்காத காரணத்தினாலேயே தன்னை பதவியில் இருந்து நீக்கியதாக விஜயதாஸ ராஜபக்ச கூறியுள்ளார்.

இதனால், நீதிமன்றத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அழுத்தங்களை கொடுக்க இணங்கினாரா என்ற கேள்விக்கு தலதா அத்துகோரள உடனடியாக பதிலளிக்க வேண்டும்.

சட்டம் மற்றும் விடயங்களின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்க வேண்டும். நபர்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது.

இதன் காரணமாக நீதி தேவதையின் கண்கள் கறுப்பு பட்டியால் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தலதா தேவதையின் கண்கள் கட்டப்படவில்லை.

இதனால், மற்றவர்களை நன்றாக பார்க்க முடியும். அமைச்சர் தலதா நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க இணங்கினாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.

கடந்த வாரம் பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையில் சட்டமா அதிபரை சந்தித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமா அதிபரை கடுமையாக விமர்சித்ததாக விஜயதாஸ ராஜபக்ச கூறியுள்ளார்.

பிரதமர் தன்னை அழைக்கவில்லை, சந்திப்பொன்றை கோரி தானே அங்கு சென்றதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

பிரதமரையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அடுத்ததாக பிணை முறிப்பத்திர விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், சட்டமா அதிபரை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் சந்தித்தனர்?. முறைப்பாட்டு தரப்பின் சட்டத்தரணியும் பிரதிவாதிகளும் சந்தித்து பேசினர் என்பதை தற்போது தான் கேள்விப்படுகின்றேன் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.