அரசுடன் சங்கமிக்கும் பொது எதிரணி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள்!

Report Print Rakesh in அரசியல்

பொது எதிரணியிலிருந்து அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக கூறப்படும் ஏழு பேரில் இருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

பிணைமுறி விவகாரத்தில் சிக்கி ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இழந்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தில் முன்னாள் அரசின் ஊழல் விசாரணை அறிக்கைகளை விஜயதாஸ ராஜபக்ச முடக்கி வைத்துள்ளதாக கூறி நீதி அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் அவர் நீக்கப்பட்டிருந்தார்.

வெளிவிவகார அமைச்சுப் பதவி திலக் மாரப்பனவுக்கும், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகள் தலதா அத்துகோரள, காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிலையில், பொது எதிரணியிலிருந்து அரசுடன் இணைந்து கொள்ளவுள்ள ஏழு பேரில் இரண்டு பேருக்கு அமைச்சுப் பதவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், ஏற்கனவே தலதா அத்துகோரள மற்றும் காமினி ஜயவிக்ரம பெரேரா வகித்த அமைச்சுப் பதவிகளே இவர்களுக்கு வழங்கப்படலாம் எனவும் அறிய முடிகின்றது.