உள்ளூராட்சித் தேர்தலை டிசம்பருக்குள் நடத்தவும்: ஜே.வி.பி. கோரிக்கை

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில் இனியும் தாமதப்படுத்தாமல் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்துமாறு அரசிடம் ஜே.வி.பி. யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. உண்மையில், இது ஜனநாயக ரீதியிலான ஒரு வெற்றியாகவே எம்மால் கருதப்படுகின்றது.

2012ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான சட்டமூலமானது இரு பிரதான கட்சிகளைத் தவிர, ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் பாரிய பாதிப்பாகவே அமைந்திருந்தது.

அப்போது தயாரிக்கப்பட்ட எல்லை நிர்ணயம் கூட ஒரு சில தொகுதி அமைப்பாளர்களின் வீட்டில் வைத்துத் தான் தயாரிக்கப்பட்டது. இதன் காரணத்தாலேயே நாம் இதற்கு அப்போது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தோம்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது மேற்கண்ட பல்வேறுபட்ட குறைகளை நிவர்த்தி செய்துள்ளதுடன், பெண் பிரதிநிதித்துவம், தொகுதிக்குப் பொறுப்புக்கூறும் பிரதிநிதி முறைமை, தேர்தல் செலவின்மை உள்ளிட்ட பல சிறந்த சரத்துகளையும் உள்ளடக்கி வந்துள்ளமையானது அனைவரதும் வெற்றியாகவே கருதப்படுகின்றது.

இனியும் காரணங்களைக் கூறி தேர்தலை தாமதப்படுத்திக் கொண்டிருக்காமல் டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers