அதிவேக நெடுஞ்சாலைகளை வெளிநாட்டு கம்பனியொன்றுக்கு கையளிக்க நடவடிக்கை: கிரியெல்ல

Report Print Rakesh in அரசியல்

தற்போது பாவனையிலுள்ள மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்வாகத்தை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்க அரசு ஆலோசித்து வருவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நெடுஞ்சாலைகளைக் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளன. அவற்றின் விலை மனுக்களின் அடிப்படையில் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்படும்.

அந்த நிறுவனத்திடமிருந்து 25 வருடங்களுக்கான முற்பணம் பெறப்படும். அந்தப் பணம் ருவன்புர, தம்புள்ள, யாழ்ப்பாணம் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்கப் பயன்படுத்தப்படும்.

நெடுஞ்சாலைகளைப் பொறுப்பேற்கும் நிறுவனம் அந்த வீதிகளின் உட்பிரவேசிக்கும், வெளியேறும் வாயில்களில் மேலதிக நவீன உபகரணங்களைப் பொருத்தி நிர்வாகத்தை மேலும் அபிவிருத்தி செய்யும்.

எனினும், பாதை அபிவிருத்தி அதிகாரசபையினர் தொடர்ந்தும் இந்த வீதிகளின் நிர்வாகத்தில் இணைந்திருப்பர்.

புதிய மூன்று நெடுஞ்சாலைகளையும் அமைக்க கிட்டத்தட்ட 440 பில்லியன் ரூபா தேவைப்படும்.

மேலும், இந்தப் பாரிய தொகையை மொத்தமாகத் திறைசேரியிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே தற்போதுள்ள மூன்று வீதிகளையும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஒப்படைத்து முற்பணத்தைப் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.