மேல் மாகாண சபையில் 700 கோடி ரூபா குறை நிரப்புப் பிரேரணை

Report Print Aasim in அரசியல்

மேல் மாகாண சபையில் நேற்று சுமார் 700 கோடி ரூபாவுக்கு குறைநிரப்புப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க கடந்த 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவான பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இசுரு தேவப்பிரியவை முதலமைச்சராக நியமித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த இசுரு தேவப்பிரிய முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டவுடன் மைத்திரி அணிக்குத் தாவியிருந்தார்.

எனினும், மேல் மாகாண சபையில் மஹிந்த அணி மாகாண சபை உறுப்பினர்களும் கணிசமான அளவில் இருப்பதன் காரணமாக மாகாண சபை நிர்வாகத்தை நடத்திச் செல்வதில் அவர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டிருந்தது.

அவ்வாறு முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு எதிரான மனோநிலையில் இருந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்தி மாகாண சபை நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்காக கடந்த ஆண்டு அவர்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் மற்றும் விசேட அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சுகாதாரம், காப்புறுதித் திட்டங்கள் மற்றும் சிற்சிறு அபிவிருத்தி வேலைகளுக்காக மாகாண அமைச்சுகளின் ஊடாக குறித்த நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.

அதற்கான நிதிச் செலவீனங்களை ஈடு கட்டும் வகையில் நேற்றைய தினம் மாகாண சபை அமர்வின் போது முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய 700 கோடி ரூபா குறைநிரப்புப் பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதேவேளை, மாகாண சபையில் குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.