ரணிலிடமிருந்து அதிகாரத்தை மைத்திரி பிடுங்கவேண்டும்!

Report Print Rakesh in அரசியல்

"கொழும்பு மாவட்ட மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பிடுங்கி இனியாவது, முழு நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்ற அரச தலைவர் மைத்திரி நாட்டை நிர்வகிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

"கூட்டு அரசை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகின்றது. நாம் ஐக்கிய தேசிய கட்சியை விமர்சிக்கும்போது ஏன் ஓர் அரசுக்குள் இருந்துகொண்டு எம்மை விமர்சிக்கின்றீர்கள் என்று அவர்கள் கேட்கின்றார்கள்.

ஆனால், உண்மையில் அவர்கள்தான் அவர்களை விமர்சித்துக்கொள்கின்றனர். சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரை நாம் விமர்சிக்கவில்லை.

அவர்களே அவர்களை விமர்சித்துக் கொள்கின்றனர். இதனால் அவர்கள்தான் கூட்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றனர். கூட்டு அரசின் தலைமைத்துவத்தை மக்கள் மைத்திரிக்கே வழங்கியுள்ளனர். ரணிலுக்கு அல்ல.

அதனால்தான் கொழும்பு மாவட்ட மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்காமல் முழு நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி மைத்திரியே நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்று நாம் அடிக்கடி கூறி வருகின்றோம்.

கடந்த மாதம் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். ரவி கருணாநாயக்கவின் அமைச்சை மாற்றி அவர் பதவி விலகும்வரை சில அதிரடியான முடிவுகளை எடுத்தார்.

இவ்வாறு ஜனாதிபதி தொடர்ந்து செயற்பட வேண்டும். இனியாவது ரணிலைத் தவிர்த்து அவரே நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். அவருக்கு மக்கள் வழங்கிய ஆணையை அவர் பயன்படுத்த வேண்டும்.

மைத்திரிபாலவின் பரந்த மனப்பான்மை காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்பதை அந்தக் கட்சி உறுப்பினர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

மைத்திரியின் நெகிழ்வுத்தன்மையை இவர்கள் பிழையாக பயன்படுத்தக்கூடாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.