கூட்டமைப்பு கூறுவது சாத்தியமாவது எப்படி?

Report Print Samy in அரசியல்

புதிய அரசமைப்புத் தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கைக்குத் தமிழர்களின் தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்படும் நிலையில், வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட கூட்டாட்சி (சமஷ்டி) கோட்பாட்டுக்கு இணங்க அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்ட தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும், அதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

அவர் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்க வேண் டும் என்பதுதான் தமிழ் மக்களின் விருப்பமும்கூட. தொடர்ந்து வந்திருக்கக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் இந்தக் கோட்பாட்டை ஆதரித்தே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வந்துள்ளார்கள். கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கைகளிலும் ஒவ்வொரு தடவையும் மறக்காமல் இதனைத் தெளிவாக வலியுறுத்தி வந்துள்ளது.

வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அதிகூடிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதைத்தான் திம்புக் கோட்பாடு முதல் மென் தமிழ்த் தலைமைத்துவங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இந்த இடைக்கால அறிக்கையில் அந்த இலக்கை அடைவதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை. ஒரு சில முற்போக்கான விடயங்கள் அறிக்கையில் இருப்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் அது ஒரு கூட்ட அறிக்கை (Meeting minute) மட்டும் தானே தவிர, இணக்கம் காணப்பட்ட அறிக்கையல்ல என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசமைப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கை ஆற்றியவருமான எம்.ஏ.சுமந்திரன் கூறும் ஒரு கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை எல்லாம் 9 மாதங்களுக்கு முன்னர் அனைத்துத் தரப்புகளாலும் இணங்கிக் கொள்ளப்பட்டவை, அதன் பின்னர் இப்போது அதிலிருந்து கட்சிகள் நழுவப் பார்ப்பது கவலைக்குரியது என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதுவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவாக இடைக்கால அறிக்கையில் எதுவும் இல்லை. கூட்டமைப்பைத் தவிர அனேகமாக எல்லாக் கட்சிகளுமே அதனை எதிர்க்கின்றன என்று அவற்றின் பின்னிணைப்பு அறிக்கைகள் தெளிவாகக் கூறுகின்றன. அதேபோன்று அதிகூடிய அதிகாரப் பகிர்வு என்பதற்கும் இடைக்கால அறிக்கையில் தெளிவான ஆதரவு இல்லை.

அத்தகைய ஒரு தெளிவற்ற இடைக்கால அறிக்கைக்கே கட்சிகள் மத்தியில் ஆதரவில்லை என்னும் போது, வடக்கு கிழக்கு இணைந்த, கூட்டாட்சிப் பண்பை ஒத்த அதி கூடிய அதிகாரப் பகிர்வை இந்தப் புதிய அரசமைப்புக்கு ஊடாக எப்படிச் சாத்தியமாக்கப் போகிறார் சம்பந்தர் என்பது தெளிவாகவில்லை.

மந்திரத்தால் மாங்காய் விழ வைக்கப் போகின்றேன் என்று கூறுபவர் இல்லை சம்பந்தர் என்றாலும், ஒன்றுக்கு ஒன்று முரணாகக் காணப்படும் விடயங்களை எப்படிச் சாத்தியமாக்கப் போகிறார் அவர் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை அவருக்கும் கட்சிக்கும் இருக்கிறது.

அதை அவர் செய்யாவிட்டால் அது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் கூடக் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

தந்தை செல்வாவுக்கு முற்பட்ட காலம் முதலே அதிகாரப் பகிர்வுக்காகத் தமிழர்கள் தொடர்ந்து போராடித்தான் வருகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இப்போது உள்ள இடைக்கால அறிக்கையிலும் தமிழர்களின் விருப்புகளைப் பூர்த்தி செய்துவிடக் கூடிய அனைத்தும் இருப்பதாகச் சொல்லி விட முடியாது.

அப்படியிருக்கும் போது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்துக்கு அதிகூடிய அதிகாரப் பகிர்வு என்பதை எப்படிச் சாத்தியமாக்குவது என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துவதன் மூலமே அவர்களது ஆதரவை இந்த விடயத்தில் கூட்டமைப்பால் திரட்டக் கூடியதாக இருக்கும்.