முஸ்லிம் மக்களுக்கு பல உதவிகளை வழங்கிய விபுலானந்தர்! இரா.சம்பந்தன் தெரிவிப்பு

Report Print Kumar in அரசியல்

வறுமை நிலையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அன்றைய காலகட்டத்தில் சுவாமி விபுலானந்தர் செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு வந்த சுவாமி விபுலானந்தர் மாநாட்டின் இறுதி நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சுவாமி விபுலானந்தர் பல மொழிகளை கற்றுள்ளதுடன், பல மொழி நூல்களையும் மொழிபெயர்த்து தந்துள்ளார்.

சுப்பிரமணிய பாரதியின் பல பாடல்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறான மொழிபெயர்ப்பு பணிகளையும் மேற்கொண்டார்.

பொதுவாக மக்களுக்கு கல்விப்பணி புரிவதில் பாரிய பங்களிப்பினை சுவாமி விபுலானந்தர் செய்துள்ளார்.

இராமகிருஸ்ண மிசனுக்கும் விபுலானந்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. மைலாப்பூரில் உள்ள இராமகிருஸ்ண மிசனில் தான் விபுலானந்தர் என்ற பெயரைப் பெற்றார்.

இலங்கையிலும் வட கிழக்கு பகுதிகளிலும் இராமகிருஸ்ண மிசனின் செயற்பாடுகளை பரப்பியவர் விபுலானந்தர் என்றும் அவர் பல பாடசாலைகளையும் ஆரம்பித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

வறுமை நிலையில் இருந்த இளைஞர்கள் தொடர்பில் அதிகளவில் சுவாமி விபுலானந்தர் அக்கறை செலுத்தினார். அனைத்து மக்களுக்கும் முடிந்தளவு சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் செயற்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இலங்கை சிவில் சேவையில் இருந்த கல்விமான் அசீஸ் அவர்களுடன் இணைந்து வறிய முஸ்லிம் மக்களுக்கும் தன்னால் இயன்ற பணியை செய்வதற்கு பின்நிற்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கு பல உதவிகளை செய்தார்கள்.

அவரை கௌரவிக்கும் வகையில் இலங்கையில் முத்திரையொன்று வெளியிடப்பட்டது. அதேபோன்று ஜேர்மனியிலும் ஒரு முத்திரை வெளியிடப்பட்டது.

சுவாமி விபுலானந்தர் மூலம் கிடைத்த படிப்பனைகள் செயற்பாடுகள் மறக்கப்படக்கூடாது. அவை அழியக்கூடாது. இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக அது தொடர்பான அறிவினை மக்களுக்கு வழங்க முடியும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், எதிர்க்கட்சி தலைவர் கௌரவிக்கப்பட்டதுடன் விபுலானந்தரின் யாழ்.நூலும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வினை, இந்து கலாச்சார திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடத்தியுள்ளது.

இதேவேளை, இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்னசிங்கம் உட்பட ஆன்மீக தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் என்று பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers