தற்போது தமிழர்கள் வாழ்வா? சாவா? என்ற நிலையில்.....

Report Print Samy in அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் அண்மையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழர்களின் விருப்பத்துக்குக் குறுக்கே முஸ்லிம்கள் நிற்கக் கூடாது. அரசியல்வாதிகள் இணைப்பைத் தடுப்பதிலும் பிரிப்பைக் கேட்பதிலும் தான் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பராயின், அது அவர்களின் அரசியல் வங்குரோத்தின் உச்சக்கட்டம் என்றே கூற வேண்டும். இவ்வாறு ஹக்கீம் தெரிவித்துள்ளமை அவரது தெளிந்த அரசியல் ஞானத்தை எடுத்துக் காட்டுகின்றது.

அவர் வடக்குக் கிழக்கு மாகாணங்களை மனதில் கொண்டே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் என நம்பலாம்.

நாட்டின் அரசமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஒன்றிணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒரு நீதிமன்றத்தீர்ப்பின் மூலமாகப் பிரிக்கப்பட் டன.

இந்திய இலங்கை ஒப்பந்தமும் இதன் மூலமாகத் தூக்கியெறியப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இந்திய இலங்கை அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பிரிப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. வடக்குக் கிழக்கு மாகாணங்களைத் தமது பூர்வீக இடங்களாக இன்றளவும் தமிழ்மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இணைந்த இவ்விரண்டு மாகாணங்களில் அவர்களே பெரும்பான்மையினர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளனர். ஆனால் இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டதன் பின்னர் அந்த நிலை மாறிவிட்டது. இதைத் தொடர்ந்து பராமரித்து வருவதைத்தான் கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர். போராடவும் செய்கின்றனர்.

ஆனால் கிழக்கில் துரிதமாக இடம்பெற்று வருகின்ற சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களின் காணிகள் மட்டும் பறிபோகவில்லை. முஸ்லிம் மக்களின் காணிகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

இந்த நிலை தொடருமானால், அந்த மக்களின் இருப்பே கேள்விக்குறியாக மாறி விடும். இதைச் சுயநலம் மிக்க சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை.

அரசியலில் பதவிகளைப் பெறுவது மட்டுமே இவர்களின் நோக்கமாகக் காணப்படுகின்றது. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்திருக்கும் போது தான் பெரும்பான்மையின இனவாதிகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரவூப் ஹக்கீம் இதை நன்கு உணர்ந்து கொண்டதால் தற்போது சரியான கருத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பிரிவினையைத் தடுக்கின்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதால் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைவதால் நாடு பிளவுபட்டு விடுமென சிங்கள மக்கள் அச்சமடையத் தேவையில்லையெனவும், உரிய தீர்வு கிடைக்காது விட்டால் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடுவார்கள் எனவும் சம்பந்தன் கூறிய கருத்துக்களைப் பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் சிங்கள மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

இனவாதிகள் வழக்கம் போன்று புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு விட்டால் நாடு இரண்டாகப் பிளவுபட்டு விடும் எனவும், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்து விட்டால் நாடு பிளவுபடுவதற்குச் சமம் எனவும் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களும் இதை நம்புகின்றனர் என்றே தெரிகின்றது.

முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்தே தீருவேன் எனச் சூளுரைத்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

சிறுபான்மையினர் எனக் குறிப்பிடப்படும் போது தமிழர்களும், முஸ்லிம்களும் அதில் உள்ளடக்கப்படுகின்றனர். பாதிப்புக்களை அடிக்கடி எதிர்கொள்பவர்களும் இவர்கள் தான்.

இவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பதால் இவர்களைத் துன்புறுத்துவது இனவாதிகளுக்கு எளிதாகப் போய்விட்டது. தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து செயற்படுவார்களாயின் அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற சவால்களைச் சமாளிப்பது எளிதாகவே இருக்கும். இனவாதிகளும் இவர்களது ஒற்றுமையைக் கண்டு மிரண்டு போய் விடுவார்கள்.

முஸ்லிம் தலைமைகள் தமிழ்த் தலைமையுடன் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டுப் பேசுவதால் தமக்கிடையே உள்ள முரண்பாடுகளுக் குத் தீர்வைக் காண முடியும். ஆற அமர இருந்து பேசும்போது முரண்பாடுகளுக்கான தீர்வும் சுலபமாகக் கிடைத்துவிடும்.

இன்றைய நிலையில் முஸ்லிம் தலைமைகள் கூறுபட்டுக் கிடக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளேயே முரண்பாடுகள் வலுத்து வருகின்றன. அதன் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குபவர்கள் அங்கு இல்லாமலில்லை.

இதைவிட அதாவுல்லா, றிசாட் பதியுதீன், பஸீர் சேகுதாவூத் ஆகியோரும் தம்மை முஸ்லிம் தலைமைகளாக உருவகப்படுத்திச் செயற்படுகின்றனர். இதனால் தமிழ் முஸ்லிம் தலைவர்களின் பேச்சு இலகுவாக இருக்கப் போவதில்லை. இழுபறிகள் ஏற்படத்தான் செய்யும்.

தற்போது ஹக்கீம் காட்டியுள்ள நல்லெண்ணச் சமிக்ஞையைத் தமிழ்த் தலைமைகள் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும். கடந்தகால கசப்பான அனுபவங்களை இனிப்பானவையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்று ஓர் உறுதியான, தீர்க்கமான கட்டத்தில் தமிழர்கள் உள்ளனர். வாழ்வா? சாவா? என்ற நிலை தான் தற்போது காணப்படுகின்றது. வாழ்வையும் சாவையும் நிச்சயிக்கப் போவது எமது எதிர்கால நடவடிக்கைகள் தான்.

இதில் கவனமாகவும் உறுதியாகவும் இருப்பது தான் வெற்றிக்கு வழி வகுக்கும். தமிழ் முஸ்லிம் தலைமைகள் இதை உணர்ந்த செயற்பட்டால் போதுமானது.