தமிழர்களின் உரிமை குரலில் காறி உமிழ்வதற்கு சமன்! மைத்திரியின் விஜயம் குறித்து சிறீதரன் எம்.பி ஆதங்கம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இது குறித்து சிறிதும் சிந்திக்காத ஜனாதிபதி, யாழ்ப்பாணம் வருகைதந்து தேசிய தமிழ்தின விழாவில் கலந்து கொள்கின்றமை தமிழ் மக்களின் உரிமை குரலில் காறி உமிழ்வதற்கு சமமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கின் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 3 பேர் தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றவேண்டாம் என கோரி தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் நீதியான கோரிக்கையினை கவனத்தில் எடுக்ககோரியும், அவர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருவதுடன், அரசியல் தரப்புக்களுடன் நாங்களும் பேசிவருகிறோம்.

ஆனால் அவற்றை சிறிதும் கருத்தில் எடுக்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

சிறிதளவு குற்ற உணர்வு அல்லது மனிதாபிமானம் இல்லாது சுதந்திரமாக உள்ள மக்கள் சமூகத்திற்கு வருபவர்போல ஜனாதிபதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வருவது தமிழ் மக்களுடைய உணர்வுகள் மீது காறி உழிழ்வதற்கு சமமானது.

இந்நிலையில் அரசியில் கைதிகளின் விடயத்தில் சரியானதும், நீதியானதுமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்வரை ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளபோவதில்லை.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளேன். அந்த கடிதத்தில் மேற்படி விடயங்களை மிக தெளிவாக கூறுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் கூறியுள்ளார்.