மக்களுடன் நாமும் இணைந்து போராடுவோம்! சித்தார்தன் எம்.பி

Report Print Thamilin Tholan in அரசியல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் உரிய கரிசனை செலுத்தத் தவறினால் எமது மக்களுடன் இணைந்து போராடி அவர்களின் விடுதலையை உறுதி செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல கைதிகள் குறித்து, கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்திற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாமல் செய்யவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ளது.

ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே அனைத்து அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசியல் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இதன் மூலமே அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதி முழுமையாக நிறைவேறும்.

அரசாங்கம் இந்த விடயத்தில் உரிய கரிசனை செலுத்தத் தவறினால், எமது மக்களுடன் நாமும் இணைந்து போராடி அவர்களின் விடுதலையை உறுதி செய்வோம்.

கடந்த காலங்கள் போன்று, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறோம்.

குறித்த கைதிகளின் நிலைமை தொடர்பாகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சரதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்குப் பல்வேறு தடவைகள் கொண்டு சென்றுள்ளோம்.

அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும் வழமை போன்றே இம்முறையும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவதில் தாமதம் தொடர்கிறது.

தங்களது வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று அரசியல் கைதிகள் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையாகவிருந்த போதும் அராசாங்கமோ அல்லது சிறைச்சாலை நிர்வாகமோ அவர்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொள்ளாமை ஆச்சரியமானதொன்றல்ல.

மூன்று அரசியற் கைதிகளினதும் உண்ணாவிரதம் ஆரம்பித்து மூன்றாவது தினத்திலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அராசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்.

நாடாளுமன்றத்திலும் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனினும், அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை வலியுறுத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.