தமிழர்களின் அடையாளம் அழியாமல் இருப்பதற்காக செயற்பட வேண்டியது தமிழ்த் தலைவர்களே

Report Print Navoj in அரசியல்

இனவாதப் போக்குகளின் மூலம் தமிழினத்தின் அடையாளம், தனித்துவம், நிலப்பரப்புகள் என்பன அழிந்து விடாமல் இருப்பதற்காக செயற்பட வேண்டியது தமிழ் மக்களது தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களது வரலாற்றுப் பொறுப்பாகும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிதாக தாபித்தல் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல் என்கின்ற மட்டக்களப்பு மாவட்ட பதில் அரச அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிதாக தாபித்தல் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல் என்கின்ற அறிவித்தல் பத்திரிகைகள் மூலமாக மட்டக்களப்பு பதில் அரச அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றிய அபிப்பிராயங்களை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், புதிய கருத்துக்களை எதிர்வரும் 01ஆம் திகதிக்கு முன்னரும் அரச அதிபருக்கு தபால், மின்னஞ்சல் மூலமாகவே அல்லது தொலைநகல் மூலமாகவோ அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எமது மாவட்டத்தின் அனைத்துப் புத்திஜீவிகள், பொதுமன்றங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் இது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்குமாறு எமது கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

யுத்த காலங்களில் எங்களுடைய இனத்திற்கான நிர்வாக சேவைகளை ஒழுங்கமைப்பதற்காக ஆளும் அரசுடன் சேர்ந்து பல முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. 12 பிரதேச செயலகப் பிரிவுகள் 14 ஆக மாற்றப்பட்டன. ஆனால் உள்ளூராட்சி மன்றங்கள் 12 ஆகவே இருந்து வருகின்றன.

தற்போது கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு, கொழும்பு பிரதான வீதி வழியாக நாவலடி சந்தியில் இருந்து வெலிகந்த வரை விஸ்தரிக்கப்படுகின்றது.

இந்த பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் ஆக்கிரமிப்புகளும் இடம்பெறுகின்றன. விவசாய நிலங்களும், நீர் நிலைகளும் இரகசியமாக கபளீகரம் செய்யப்படுகின்றன.

அதேவேளை கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசத்திற்குச் சொந்தமான புணானை, ரிதிதென்ன போன்ற பிரதேசங்கள் புதியதொரு பிரதேச சபை அமைப்பதற்காக அபகரிக்கப்படுகின்றன.

இந்த விடயங்களை கவனிக்காமல் இருப்பதற்காக சமூக மட்ட நிறுவனங்களின் தலைவர்கள் கையூட்டுபெறும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. இவற்றை எதிர்க்க முற்படுபவர்கள் சில அதிகாரிகளாலும், சில அரசியல்வாதிகளாலும் மிரட்டப்படுகின்றார்கள்.

காணி விடயங்கள் தொடர்பாக எதிர்ப்பு வெளியிடும் பிரதேச செயலாளர்களை மாவட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு செங்கலடி, கிரான், வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான நிலப்பரப்புகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமிக்கின்றது.

குறிப்பாக சொல்லப்போனால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 93 வீதமான நிலப்பரப்பு இன்று மகாவலி அதிகார சபையின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இனவாதப் போக்குகளின் மூலம் தமிழினத்தின் அடையாளம், தனித்துவம், நிலப்பரப்புகள் என்பன அழிந்து விடாமல் இருப்பதற்காக ஒன்று கூடிச் செயற்பட வேண்டியது தமிழ் மக்களது தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களது வரலாற்றுப் பொறுப்பாகும்.

அதேவேளை தமிழ் சமூகத்தின் அரசியற்பலம் இன்னும் அதிகரிப்பதற்காகப் புதிய உள்ளூராட்சி சபைகளை முன்மொழிய வேண்டியதும் தமிழ் புத்துஜீவிகள், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்களின் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார்.