கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் சிவாஜிலிங்கம்

Report Print Thamilin Tholan in அரசியல்

அரசியல் கைதிகளின் விடயம் தவிர்ந்து வேறு எந்த விடயமாக இருந்தாலும் பரவாயில்லை என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், த.தே.ம.முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ஜனாதிபதியை முதலில் சென்று சந்தித்ததும், பேசியதும் சிவாஜிலிங்கமே. இது முன்னதாகவே திட்டமிடப்பட்டது. இவர் அரசாங்கத்துக்கு துணை போகின்றார்” என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ். ஊடகமையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் போது பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கறுப்புக்கொடி ஏந்தி இந்த போராட்டங்கள் நடைபெற்றன.

முதலில் போராட்ட இடத்திற்கு நானே வந்தேன. அதன் பிறகு 45 நிமிடங்கள் கழிந்த பின்னரே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்தார். இந்த நிலையில் நான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு செயற்படுவதாக அவர் குறிப்பிடுவது அப்பட்டமான பொய்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குறித்த கருத்தக்கு நான் கடுமையான கண்டனம் வெளியிடுகின்றேன்.

அரசியல் கைதிகள் விடயத்தை அரசியல் ஆக்க வேண்டாம், கைதிகளின் விடயத்தில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்.

அரசியல் கைதிகளின் விடயத்தை தவிர்த்து வேறு எந்த விடயமாக இருந்தாலும் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வாருங்கள் என சிவாஜி லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் பெயரை பயன்படுத்தாமல் உங்களால் அரசியல் செய்ய முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் என்னுடன் சேர்ந்து அரசியல் கைதிகளின் உறவினர்களும் வடமாகாண ஆளுநரை சந்தித்திருந்தார்கள். இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அந்த அழைப்பை நாம் ஏற்க வேண்டும். அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தும் இதேவேளை பேச்சுவார்த்தைகளையும் நாம் முன்னெடுக்க வெண்டும். தயவு செய்து இதை அரசியலாக்காதீர்கள். எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.