அரசியல் கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும்! சம்பந்தன் எம்.பி

Report Print Samy in அரசியல்

தமிழ் அரசியல் கைதிகளை எந்தவித தாமதமுமின்றி உடன் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று வலியுறுத்தவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மாலை ஒத்திவைப்பு வேளையில் தான் சமர்ப்பித்து உரையாற்றவுள்ள பிரேரணை தொடர்பில் இரா.சம்பந்தன். நேற்று அறிக்கை விடுத்தார்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே விடயத்தை வலியுறுத்தி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அப்படியே இதில் தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சில வழக்குகள் வவுனியாவில் இருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றப்பட்டதன் மூலம் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும்.

குற்றஞ்சாட்டப்பட்ட கைதிகள் வடக்கு -– கிழக்கைச் சேர்ந்த தமிழ்மொழி பேசுபவர்கள் என்பதுடன் மற்ற நிர்வாக அல்லது நீதிமன்றப் பாவனையில் உள்ள சிங்கள மொழியில் பாண்டித்தியம் இல்லாதவர்களாக இருக்கின்ற அதேவேளை, தமிழ்மொழிப் பாவனையில் உள்ள வவுனியா நீதிமன்றத்தில் இருந்து சிங்கள மொழிப் பாவனையில் உள்ள அநுதாரபுர நீதிமன்றத்துக்கு அவர்களுடைய வழக்குகள் மாற்றப்படுகின்ற போது, அவர்களால் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கான அரசமைப்பு ரீதியான அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஒரு குற்றவியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உரிமை என்பது அடிப்படையானது. அவருக்கெதிராக முன்வைக்கப்படவுள்ள வழக்கையும், சாட்சியங்களையும் முழுமையாகக் கேட்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் அவருக்கு முழு உரிமையுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த வழக்கு இடமாற்றமானது குற்றஞ்சாட்டப்பட்ட நபரது அடிப்படை உரிமை சம்பந்தமாக எந்தவொரு அவதானிப்பையும் கருத்திற்கொள்ளவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றது.

இடமாற்றத்துக்கு எதிராகக் கைதிகள் தொடர்ச்சியாக உணவு மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலைமையானது அவசரமான அடிப்படையில் கையாளப்பட வேண்டியதாகும்.

மேற்குறிப்பிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கைதிகள் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன் என்றுள்ளது.