புதிய அரசமைப்பு உருவானால் மக்கள் ஆயுதம் ஏந்துவார்களாம்: மிரட்டும் மேர்வின்

Report Print Rakesh in அரசியல்

பிரிவினைவாதிகளின் கொள்கைகளுக்கு அரசு தொடர்ந்தும் தலைசாய்த்து வந்தால் பொதுமக்கள் நாட்டுக்காக ஆயுதமேந்த வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது சிங்கள பௌத்த நாடாகும். இங்கு சம உரிமையுடன் வாழ்வதற்கு ஏனைய இனத்தவர்களுக்கும் ஆண்டாண்டு காலமாக அனுமதி வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

சர்வதேசம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வளைந்துகொடுத்து புதிய அரசமைப்பொன்றை நாட்டில் ஸ்தாபிக்க வேண்டிய அவசியமே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்படடுள்ள தமது கட்சி மற்றும் தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கொழும்பு ஊடகம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போதுள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் சிங்கள பௌத்த மக்கள் குறித்து அக்கறையில்லாத காரணத்தால்தான் நாம் இந்தக் கட்சியை ஆரம்பிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதுபோன்றவர்கள் சிங்கள மக்களை மட்டுமன்றி, சிறுபான்மையின மக்களையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால், எமது அரசியல் பயணமானது ஒருபோதும் அவ்வாறு அமையாது. நாம் சிங்கள பௌத்த மக்களுக்காகவே இந்தக் கட்சியை ஆரம்பித்தோம்.

உண்மையில், இவர்கள்தான் நாட்டில் பாரிய பிரச்சினைகளுக்கெல்லாம் முகங்கொடுத்து வருகின்றனர். வடக்கில் இவர்களுக்குக் குடியேறமுடியாத நிலையே தற்போதும் காணப்படுகிறது.

இவை எல்லாம் இல்லாதொழிந்து அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும் ஐக்கியத்துடனும் வாழவேண்டும் என்ற நோக்கிலேயே நாம் இந்தக் கட்சியை ஆரம்பித்துள்ளோம்.

அத்தோடு, ஆண்டாண்டு காலமாக தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் பூரண சுதந்திரத்துடன் வாழ்ந்துவரும் நிலையில், தேவையில்லாமல் புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுகின்றமையையும் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

சர்வதேசம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து அவர்களை திருப்திப்படுத்த அரசால் மேற்கொள்ளப்படும் ஒன்றாகவே நாம் இதனைக் கருதுகின்றோம்.

எனவே, இதுபோன்ற வீண் செயற்பாடுகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரிவினைவாத செயற்பாடுகள் தொடர்ந்தால் பொதுமக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.