ஈழத் தமிழர்களைக் காப்பாற்றாத குற்றம் சர்வதேசத்தை வையும்!

Report Print Samy in அரசியல்

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த கொடும் போர் 2009ஆம் ஆண்டில் முடிந்து இன்று எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ் மக்களுக்கு எந்த இழப்பீடும் விமோசனமும் கிடைக்கவில்லை.

வன்னிப் போரில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட சம்பவங்கள் ஆதாரபூர்வமானவை. சுருங்கக்கூறின் தமிழின அழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்றே அதனைப் பதிவு செய்ய வேண்டும்.

மனித உரிமை விவகாரங்கள் உச்சம் பெற்றிருக்கக்கூடிய இக்கால கட்டத்தில் ஐ.நா அமைப்பு முதல் மனித உரிமை பேணும் அமைப்புக்கள் உச்சமாக வளர்ச்சியடைந்த நிலையில் தான் ஈழ மண்ணில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் எனும் போது இச் செயலுக்காக சர்வதேச சமூகம் எப்போதும் நொந்து கொள்ளும் என்பது சத்தியம்.

இவை ஒருபுறமிருக்க, ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் இன்று வரை அவர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்படவில்லை என்பது பெரும் குறைபாடாக உள்ளது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும், போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்ற உறுதிமொழிகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசு வழங்கியுள்ள போதிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற - காலங் கடத்துகின்ற நயவஞ்சத்தையே தொடர்ந்தும் இலங்கை அரசு செய்து வருகிறது.

இது தொடர்பான புரிதல் ஐ.நா உட்பட சர்வதேச சமூகத்துக்கு உள்ளதாயினும் அதுபற்றி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இலங்கை அரசு மீது எடுக்கப்படவில்லை.

இதற்குத் தமிழ் அரசியல் தலைமையை இலங்கை அரசாங்கம் கைக்குள் வைத்திருப்பதும் அண்டை நாடான இந்தியா, இலங்கை ஆட்சியாளர்களைக் காப்பாற்ற முற்படுவதும் காரணமாக இருந்தாலும் சர்வதேச சமூகத்துக்கென இருக்கக்கூடிய தார்மீகப் பொறுப்பை அது செய்தாக வேண்டும்.

அந்தப் பொறுப்பில் இருந்து விடுபடுவது என்பது மனித உரிமைகளை, சிறுபான்மை இனங்களைக் காப்பாற்ற சர்வதேச சமூகம் தவறி விட்டது என்ற குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும்.

அதேநேரம் சிறுபான்மை இனங்களின் உரிமைகள், அவர்களின் அதிகாரங்கள் பாதுகாக்கப்படா விட்டால் தொடர்ந்தும் அந்த மக்கள் ஆட்சியாளர்களாலும் பெரும்பான்மை இனவாதிகளாலும் நசுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.

ஆக, பெரும்பான்மை இனத்தின் அல்லது அவர்கள் ஜனநாயகத்தின் பெயரால் அமைக்கப்படுகின்ற ஆட்சிப் பீடங்களே எல்லாம் செய்ய வேண்டும்.

அவர்களோடு சேர்ந்து செல்வது சிறுபான்மை இனத்தின் கடமை என சர்வதேச சமூகம் கட்டாயப்படுத்துமாக இருந்தால் இந்த யுகத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட மாட்டாது என அறுதியிட்டுக் கூற முடியும்.

எது எவ்வாறாயினும் இலங்கை விவகாரத்தில் ஐ.நா அமைப்பும் சர்வதேச சமூகப் பிரதிநிதிகளும் உண்மையை உணர்ந்து கொண்டு அறிக்கைகளை, கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும் அவை போதுமானவை அல்ல என்பதே உண்மை.

வன்னி யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை என்றால்; குற்றம் செய்தவர்களுக்குத் தண் டனை வழங்கப்படவில்லை என்றால் சர்வதேச சமூகத்துப் பணியும் காலங்கடத்துவதாக இருப்பதென்று சொல்வதைத் தவிர வேறில்லை.

எனவே இலங்கை அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

இல்லையேல் தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படும் இனமாக - எச்சந்தர்ப்பத்திலும் பேரினவாதத்தின் கோரப்பசிக்கு இரையாகக்கூடிய இனமாகவே இருக்கும் என்பது விதியாகி விடும்.

- Valampuri