மக்கள் ஆணையின்றி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணையுமா?

Report Print Samy in அரசியல்

இந்து சமுத்திரத்தில் பல்லின மக்கள் வாழும் இலங்கைத் தீவை அந்நியர் ஆக்கிரமித்து சுமார் 445 வருடங்கள் தம் ஆளுகைக்கு உட்படுத்தி இருந்தனர்.

அவர்களில் இறுதியாக இந்நாட்டை ஆக்கிரமித்திருந்த பிரித்தானியர் சுமார் 140 வருடங்களுக்கு பின்னர், அதாவது 1948 ல் இந்நாட்டுக்கு சுதந்திரத்தை வழங்கி சென்றனர்.

என்றாலும் சுதந்திரத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் விளைவாக இன, மொழி ரீதியிலான சந்தேகங்களும், ஐயங்களும் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றன.

அவை மக்களுக்கிடையே விரிசல்களை வளரச் செய்தன. இதன் உச்ச கட்டமாக இந்நாடு சுமார் மூன்று தசாப்த காலம் ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டது.

இந்த ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்களும் இந்நடவடிக்கைகளில் துரதிஷ்டவசமாக இரத்தம் சிந்தியவர்களும் இம்மண் ஈன்றெடுத்த பிரஜைகளேயாவர்.

இந்நாட்டை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இம்மனித வளம், பிழையான அரசியல் வேலைத்திட்டங்களின் விளைவாக இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளானது.

இப்போது நாட்டில் யுத்தமோ, இரத்தம் சிந்துதலோ இல்லை. அவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலை இந்நாட்டில் இனியொரு போதுமே ஏற்படக் கூடாது. அதற்கு இடமளித்திடவும் கூடாது.

இதில் மிக தெளிவான நிலைப்பாட்டைத் தற்போதைய இணக்கப்பாட்டு அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அத்தோடு இந்நாட்டில் சுபீட்சத்தையும், விமோசனத்தையும் ஏற்படுத்திடவும் இந்த அரசாங்கம் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றது.

அதன் பிரதிபலன்களை இந்நாட்டில் வாழும் எல்லா மக்களுமே அனுபவிப்பர். இந்த இலக்கை அடைவதற்கு நாட்டில் சகவாழ்வு, நல்லிணக்கம் மிகவும் அவசியமானது. அதனைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

அவற்றில் பிரதான நடவடிக்கை தான் இந்நாட்டில் வாழும் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதாகும். இதன் நிமித்தம் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. அத்தோடு பல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு அது தொடர்பிலான விவாதம் கடந்த திங்கள் முதல் பேரவையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இருப்பினும், நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளைக் குழப்பியடித்து அவற்றின் ஊடாக அற்ப அரசியல் இலாபம் பெறவும், நாடு சுபீட்சம் அடைவதைத் தடுத்திடவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உள்ளிட்ட சில சக்திகள் தருணம் பார்த்த வண்ணமுள்ளன.

அதனால் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகங்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்னெடுக்கின்றது.

குறிப்பாக வதந்திகளையும், பொய்களையும் பரப்பி வருகின்றனர்.அவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்றுதான் உத்தேச புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவுள்ளதாகவும், இது நாடு பிரிய வழி வகுக்கும் என்றும் புரளியை கிழப்புவது.

இவ்வதந்தி, பொய் பிரசாரங்களை சிலர் நம்பி இருப்பதை அண்மைய பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வதந்தியையும் பொய் பிரசாரத்தையும் முறியடிக்கும் வகையில் பாராளுமனறத்தின் ஊடாக கடந்த புதனன்று நாட்டுக்குத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

அதாவது “இந்த நாட்டில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. இம்மாகாணங்களைப் பாராளுமன்றத்தினால் பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது. முழு நாட்டு மக்களினதும் இணக்கமின்றி இரு மாகாணங்களை ஒன்றிணைக்கவோ, மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது.

நாட்டிலுள்ள சகல மக்களும் இணங்கினால் மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். அதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களையோ அல்லது வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களையோ பாராளுமன்றத்தினால் ஒன்றிணைக்க முடியாது“ என அறிவித்திருக்கின்றார். அது தான் உண்மை.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உத்தேச அரசியல் யாப்புக்கு எதிராக முன்னெடுக்கும் பொய் பிரசாரத்திற்கு இது தகுந்த பதிலடியாகும். இந்நாட்டு யாப்பின் பிரகாரம், மக்களின் அங்கீகாரமின்றி எந்தவொரு மாகாணத்தையும் மற்றொரு மாகாணத்துடன் இணைக்க முடியாது.

1987 ஆம் ஆண்டில் கூட வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் தற்காலிகமாகவே இணைக்கப்பட்டது. அந்த இணைப்பை நீடிப்பதா இல்லையா என்பதை ஒரு வருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானித்திருக்க வேண்டும்.

ஆனால் அன்றிருந்த பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமையினால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாத நிலை நீடித்துக் கொண்டிருந்த வேளையில், உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் 2006 இல் அத்தற்காலிக இணைப்பு பிரிக்கப்பட்டதும் தெரிந்ததே.

அதேநேரம், இந்த இரு மாகாணங்களும் தற்காலிகமாக ஒன்றிணைக்கப்பட்டிருந்த போது நாடு பெற்றுக் கொண்ட அனுபவங்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலை என்பவற்றை நோக்கும் போது இணக்கப்பாட்டு அரசாங்கம் மக்கள் ஆணை அளிக்காத ஒரு காரியத்தை ஒரு போதும் செய்யப் போவதில்லை. இது மிகவும் தெளிவான விடயம்.

ஆகவே சக வாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி நாட்டில் சுபீட்சத்தையும் விமோசனத்தையும் தழைத்தோங்கச் செய்திட அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டின் மீது உண்மையாகப் பற்றுக் கொண்டவர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதுவே இன்றைய தேவையும் எதிர்பார்ப்பும் ஆகும்.