தமிழர்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?

Report Print Samy in அரசியல்

புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கையின் மீது அரசமைப்புச் சபையாக மாறிய நாடாளுமன்றத்தில் நான்கு நாள்கள் விவாதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் ஒரு நாள் மீதமிருக்கின்றது.

திட்டமிட்டதற்கும் மேலதிகமாக இரு நாள்களை எடுத்துக் கொண்டு இந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.

விவாதத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடிக்கடி கூட்டு எதிரணி சொல்லும் எல்லாத் திருத்தங்களை யும் ஏற்கிறோம் என்றார்.

இடைக்கால அறிக்கையில் கூட்டு எதிரணி சார்பில் முன்வைக்கப்பட்ட பின்னிணைப்பைக் கையில் வைத்துக் கொண்டு அவர் இதனை மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.

வடக்கு -– கிழக்கு மாகாணங்களின் இணைப்பை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதைத் தவிர, கூட்டு எதிரணியின் எல்லா யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அவர் அறிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் வருகின்ற நேரத்தில் கூட்டு எதிரணியுடன் முரண்பட்டுக் கொண்டு சிங்கள பௌத்த தேசியத்துக்குத் தீனி போடுவதன் மூலம் மகிந்தவைப் பலப்படுத்தி விட வேண்டாம் என்று கருதியே சபையில் ரணில் அப்படிப் பேசினார், அது ஒரு இராஜதந்திர நகர்வு என்று சொல்லக் கூடிய அரசியல் அவதானிகளும் இருக்கிறார்கள்.

70 வீதமான சிங்களவர்களின் ஆதரவு இல்லாமல் புதிய அரசமைப்பைக் கொண்டுவர முடியாது என்பதால் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதே ஆட்சியாளர்களின் முக்கிய தேவை, அதை மறுக்கவும் முடியாது என்று அத்தகையவர்கள் நியாயமும் கற்பிக்கிறார்கள்.

அது சரியான இராஜதந்திரம் தான், அந்த நியாயம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான் என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டால், அந்த இராஜதந்திரத்துக்குப் பதில் இராஜதந்திரத்தை மகிந்த நகர்த்தியிருப்பதை இவர்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்.

புதிய அரசமைப்பு ஒன்று இப்போது தேவையே இல்லை, அதற்கு மக்கள் ஆணை வழங்கவும் இல்லை, அதிகாரப் பகிர்வுக்கான முயற்சியை உடன் நிறுத்தி விட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி தேர்தல் முறைமை மாற்றம் மற்றும் நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையை ஒழிப்பது ஆகியவற்றை மட்டும் செய்தால் போதும் என்று மகிந்த திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

அதாவது மகிந்தவுக்குப் பயந்து பயந்து இன்றைய ஆட்சியாளர்கள் புதிய அரசமைப்புத் தொடர்பில் அவரது அணி முன்வைத்த யோசனைகளை ஏற்பதாக அறிவித்த கணத்தில் அத்தகைய அரசமைப்பே வேண்டாம் என்று நிராகரித்து விட்டார் மகிந்த.

போதாததற்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தேவையில்லை என்று சொல்லி விட்டார்.

70 வீதமான சிங்களவர்களின் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம் என்று புதிய அரசமைப்புத் தொடர்பில் மகிந்த அணி முன்வைத்த யோசனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஆட்சித் தலைவர்கள், அதே 70 வீத மக்களின் ஆதரவு தேடி மகிந்த சொல்வதைப் போல அதிகாரப் பகிர்வுக்கான முயற்சியையே கைவிடுவார்களா?

மகிந்தவை எதிர்க்காமல் இருப்பதன் மூலம் தான் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்பது தான் ஆட்சியாளர்களின் இராஜதந்திரமானால், மகிந்தவின் இந்த யோசனையையும் அவர்கள் ஏற்றுத்தானாக வேண்டும். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

இந்த ‘‘வரலாற்று வாய்ப்பை’’ பெறுவதற்கு முன்னரான காலாகாலத்திலும் இதுவே தான் நடந்தது. அதிகாரப் பகிர்வு, தீர்வு என்பவற்றை ஒரு தரப்பு ஆதரிக்கும் மறு தரப்பு எதிர்க்கும். எதிர்க்கும் தரப்பின் மீது பழியைச் சுமத்தி விட்டு ஆதரிக்கும் தரப்பு தனது முயற்சிகளைக் கைவிட்டு ஒதுங்கும்.

மாறி மாறி இதுவேதான் நடந்தது. இப்போதும் அதுவேதான் நடக்கிறது என்றால் தற்போது கிடைத்திருப்பது ‘‘வரலாற்று வாய்ப்பு’’ என்று அரசமைப்புச் சபையில் உறுப்பினர்கள் பலரும், அனேகமாக எல்லோரும் உரையாற்றியதன் பொருள் தான் என்ன?

மீண்டும் மீண்டும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவதாகவே இலங்கையின் அரசியல் நகரும் போது புதிய அரசமைப்பு முயற்சிகளின் மீது எப்படித் தமிழர்கள் நம்பிக்கை வைக்க முடியும்?