பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு ஜப்பானிய நிபுணரின் ஆலோசனை!

Report Print Subathra in அரசியல்

போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கான கடப்பாட்டை ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் அதற்கான பொறிமுறைகளை இன்னமும் உருவாக்கவில்லை என்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில் அண்மையில் ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி இலங்கைக்கு வந்திருந்தார். அவர் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

இதில் பாதுகாப்புச் செயலர் கபில் வைத்தியரத்ன, முப்படைகளின் தளபதிகள், உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் பல்வேறு அரச அதிகாரிகள், படைத் தளபதிகளுடனும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகளுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுடனும் அவர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

மோட்டூ நுகுசி ஒரு சர்வதேச சட்ட நிபுணர். 2012 ஜூலை வரை ஜப்பானிய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர்.

1996ம் ஆண்டு தொடக்கம் வெளிநாடுகளில் குற்றவியல் விசாரணை வழக்குகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். வாசிங்டன் சட்டப் பாடசாலையிலும், யேல் சட்டப் பாடசாலையிலும், டோக்கியோ பல்கலைக்கழகத்திலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஐநா விலும் பணியாற்றிய அவர் கம்போடியாவில் போர்க்குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் ஒரு நீதிபதியாகப் பணி புரிந்திருந்தார்.

சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள், போர்க்குற்ற வழக்குகள் போன்றவற்றில் அனுபவம் கொண்டவர்.

இவரது ஆலோசனையை இலங்கை அரசாங்கம் பெற்றிருப்பது இதுதான் முதல்முறை என்றில்லை.

மகிந்த ராஜபக்ச காலத்திலேயே இவரது ஆலோசனைகளைப் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவை போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்க ஆணை வழங்கியிருந்தார் மகிந்த ராஜபக்ச.

உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று சர்வதேச சமூகம் கூறிய போது அதன் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்காக ஆறு வெளிநாட்டு நிபுணர்களை ஆலோசகர்களாக நியமிப்பதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.

அவ்வாறு பரணகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட டெஸ்மன் டி சில்வா தலைமையிலான ஆறு வெளிநாட்டு நிபுணர்களில் ஒருவர் தான் மோட்டூ நுகுசி.

இவர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மாத்திரமன்றி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த பின்னருங்கூட இலங்கைக்கு வந்திருந்தார். அரச தரப்புக்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

மோட்டூ நுகுசியின் பயணத்துக்கான முக்கிய காரணம் பொறுப்புக்கூறல் பொறிமுறையை வடிவமைப்பதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

எனினும் அரச மற்றும் இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்புகளில் அவர் எதற்காக இந்தச் சூழலில் நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என்பதை விளக்குவதற்கு முயற்சித்துள்ளார். பொறுப்புக்கூறல் என்பதொரு குறிப்பிட்ட சமூகத்தையும் இலக்கு வைத்த ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

இலங்கை இராணுவத்தை முழுமையாக இலக்கு வைப்பதாக அது இருக்காது. தீவிரமான குற்றங்கள் என்று வரும் போது எந்தப் பாகுபாடும் காட்டப்படாது. இதனை இலங்கையின் சில சமூகத்தினர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சில பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. உதாரணமாக பொறுப்புக்கூறல் பொறிமுறை இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு மட்டும் மட்டுப்படுத்தியதாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஆனால் மறுபக்கத்தில் விடுதலைப் புலிகளின் எல்லாத் தலைவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டனர். எனவே விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு யார் பொறுப்புக்கூறுவது? இந்தக் கேள்விக்குப் பதிலொன்றைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்த முட்டுக்கட்டையை நீக்குவதற்கு ஒரு பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இடைக்கால நீதிக்குப் பொறுப்பான அரச தரப்பில் உள்ளவர்களின் தகவல்கள் தெளிவாகவும் ஒத்தசைவாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இப்போது தான் ஒரு நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை அதிகாரிகள் மட்ஹடத்தில் வலியுறுத்துவதற்கான பணியை ஆரம்பித்துள்ளது.

ஜப்பானிய நீதிபதி நுகுசி பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், படைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் படையதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் மத்தியில் அவர் தெளிவாக சில விடயங்களைக் கூறியிருக்கிறார்.

அதில் முக்கியமானது மீறல்களுக்கு நிறுவன ரீதியாக ஒட்டுமொத்த இராணுவத்தையும் பொறுப்புக்கூற வைக்கும் செயல்முறை ஏதும் உருவாக்கப்பட மாட்டாது என்பதாகும்.

தமது தரப்பில் இலங்கை இராணுவத்தை இனப்படுகொலை இராணுவமாக அடையாளப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான சான்றுகளை நிறுவுவதில் யாரும் வெற்றி பெற்றதாக கூற முடியாது.

அதேவேளை தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கு இணங்கியிருந்தாலும் ஒட்டுமொத்த இராணுவத்தையும் பொறுப்புக்கூற வைப்பதில்லை என்பதில் உறுதியாகவே இருந்து வந்திருக்கிறது.

இராணுவத்திலுள்ள சிலரே தவறுகளை இழைத்தனர். இராணுவத்தில் சில கறுப்பு ஆடுகள் உள்ளன என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச தரப்பில் பலரும் உறுதியளித்திருந்தனர்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மாத்திரம் அதற்கு விதிவிலக்காக கருத்துகளை தெரிவித்து வந்தார். அவர் போரில் பங்கெடுத்த படையினரைக் காப்பாற்றுவேன் என்று உறுதிமொழியை அளித்திருந்தார்.

ஒட்டுமொத்த இராணுவத்தையும் பொறுப்புக்கூற வைக்கும் முயற்சியாக இருந்தால் அதற்குப் பரந்துபட்ட எதிர்ப்பை அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும். ஒட்டுமொத்த இராணுவத்தினரும் அரசாங்கத்துக்கு எதிராக திரும்புவார்கள். ஆனால் குற்றமிழைத்தவர்களை மாத்திரம் குறிவைக்கும் போது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் முன்னைய அரசின் விசுவாசிகள் பலரைக் களையெடுப்பதற்கும் வாய்ப்பு கிட்டும்.

தவறு செய்த படையினரால் தான் இராணுவத்திற்கு கெட்ட பெயர் என்று கூறி போர்க்கால மீறல்கள் அனைத்தையும் அவர்களின் தலையில் கட்டி நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு வன்முறை தமிழர்கள் மீது ஏவி விடப்படவில்லை என்று நிரூபிக்கவே அரசாங்கம் முனைகிறது.

ஜப்பானிய நீதிபதி நுகுசி போன்றவர்களைக் கொண்டு குற்றமிழைத்த தனிநபர்கள் மீது மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்குக் கூட தமது நியாயங்களைக் கூற போதிய வாய்ப்பு அளிக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் கொடுக்க முனைகிறது.

போர்க்குற்றச்சாட்டுகள் என்றதுமே அரச தரப்பும் இராணுவத் தரப்பும் சிங்கள மக்களும் தனியே தமக்கு எதிரான நடவடிக்கையாகவே இதுவரையில் பார்த்து வந்திருக்கின்றனர்.

எனினும் இறுதிப் போரின் போது இரண்டு தரப்புகளுமே மீறல்களில் ஈடுபட்டதாகவே ஐநா வினது அறிக்கைகளிலும் உள்ளக அறிக்கைகளிலும் கூறப்பட்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதற்காக இறந்து போன தலைவர்களை தட்டி எழுப்ப முடியாது. அதேவேளை அவர்கள் இறந்து விட்டார்கள். அதற்குப் பின்னரும் பொறுப்புக்கூற வைப்பதற்கு ஆட்களைத் தேடிப் பிடிக்க முடியாது.

புலிகளில் யாரையும் பொறுப்புக்கூற வைக்க முடியாது என்பதற்காக குற்றமிழைத்த படையினரைக் காப்பாற்ற முனைவது அபத்தம்.

இருந்தாலும் இதற்கொரு வழி கண்டுபிடிக்க வேண்டியிருப்பதாக ஜப்பானிய நீதிபதி நுகுசி தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கம் தன்னையும் இராணுவத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பொறிமுறை ஒன்றையே உருவாக்கப் போகிறது.

அது பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்குமா என்பது அதனை உருவாக்கும் முறையும் செயல்படும் தன்மையும் தான் தீர்மானிக்கும்.