கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்பதா? இல்லையா?

Report Print Steephen Steephen in அரசியல்

சீனாவின் உதவியுடன் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சீனாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்வது போல், இந்தியா மற்றும் ஜப்பானின் உதவியுடன் திருகோணமலை பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படும்.

மத்திய மலை நாட்டில் குறிப்பாக குண்டசாலை பிரதேசத்தில் தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்படும்.

இப்படியான அபிவிருத்தியை நோக்கி செல்லும் போது தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அறிவுகளை கொண்ட இளம் தலைமுறையினர் தேவைப்படுகின்றனர்.

அது மாத்திரமல்ல வறுமையை ஒழித்து சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் வறுமை குறைந்துள்ளது. மத்திய அதிவேக வீதிக்காக நிதியமைச்சர் 10 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளார்.

அதனை செய்து முடிக்க சுமார் இரண்டு ஆண்டுகளாகும். ஏற்கனவே அதிகளவான வேலைகளை செய்துள்ளோம்.

வீதியை நிர்மாணிப்பதற்கு தேவையான காணிகளை சுவீகரித்து அதற்கான இழப்பீடுகளை வழங்கி வருகின்றோம். வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க ஆயிரத்து 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற போது மேலதிக நிதி கையிருப்பு இருந்த நாடு தற்போது 7 ஆயிரம் பில்லியன் ரூபா கடனில் உள்ளது. கடந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு முன்னோக்கி செல்வதா அல்லது அதே தவறுகளை மீண்டும் செய்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் அவசியமில்லை என்று சிலர் கூறுகின்றனர். நான் கடந்த காலத்தில் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

நாட்டின் தேசிய பிரச்சினைகளை இந்த நாடாளுமன்றத்தில் எம்மால் தீர்த்துக்கொள்ள முடிந்தால், எமது எதிர்கால சந்ததிக்கு சிறந்த எதிர்காலம் உருவாகும்.

மீண்டும் ஒரு போருக்கு சென்றால், நாம் பாரிய இழப்பை சந்திக்க நேரிடும். போர் காரணமாக நாடு 400 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளது.

யுத்தம் மீண்டும் ஏற்பட வழி வகுக்க வேண்டுமா அல்லது யுத்தம் இல்லாத நாட்டை எதிர்கால சந்திக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமா என்பது நமது பொறுப்பு எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.