சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையை இழக்கக்கூடிய அபாயத்தில்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சியின் உறுப்புரிமையை இழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியை தற்போது பிரதிநிதித்துவம் செய்து வரும் முக்கிய உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பவித்ரா வன்னியாராச்சி, திலும் அமுனுகம, சீ.பி ரட்நாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தி, கட்சி உறுப்புரிமை நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டு அது குறித்து தேர்தல் ஆணைக்குழுத் தலைவருக்கு அறிவித்தால் அவர்கள் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் , சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களை எதிர்க்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சிக்கு குமார வெல்கம, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.