2025ல் வடக்கு – கிழக்கு மக்களின் நிலை என்ன? பதில் சொல்ல வேண்டியது கட்டாயம்!

Report Print Samy in அரசியல்

வளம் மிக்க இலங்கை -2025’ என்கிற கொள்கைத் திட்ட முன்மொழிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்டார். நாட்டை வளம் மிக்கதாக மாற்றுவது இதன் நோக்கம்.

இந்து மா கடலின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாக இலங்கையை மாற்றுவதன் மூலம் இந்த நோக்கத்தை அடைவது அந்தத் திட்டத்தின் வழி.

எல்லா மக்களும் உயர்ந்த வருமானத்தையும் சிறப்பான வாழ்க்கையையும் பெறத்தக்க சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது இந்தக் கொள்கையின் நோக்கம் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

சமத்துவமான பொருளாதார வளர்ச்சியை எல்லோருக்கும் சாத்தியமாக்க வேண்டியது இதற்கு முக்கியமானது என்றும் அந்தக் கொள்கை அறிவிப்புக் கூறுகின்றது.

அடுத்த ஆண்டுக்காகத் தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் இந்தக் கொள்கையை ஒட்டியதாகவே அமைந்திருப்பதைக் காணலாம்.

நீல – பசுமை வரவு – செலவுத் திட்டம் ‘என்ரர்பிறைசஸ் சிறிலங்கா’ என்ற தலைப்பிலேயே அதுவும் பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் வருமானத்தை மேல் நடுத்தர வர்க்க வருமானமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் இது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் தெரிவித்திருந்தார்.

அந்த நோக்கத்தை அடைவதையொட்டிய தூர நோக்குடனான அபிவிருத்தித் திட்டங்களே வரவு செலவுத் திட்டத்தில் முன்னிறுத்தப்பட்டும் இருக்கின்றன.

ஒட்டுமொத்த இலங்கையையும் அதன் மக்களையும் மேல் நடுத்தர வருமான மட்டத்திற்குத் தரமுயர்த்தும் நோக்கத்துடன் அரசு கொள்கைத் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இலங்கை கீழ் நடுத்தர வருமானம் பெறும் மக்களைக் கொண்ட நாடாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இந்த அளவீடு பொருந்தக்கூடும். ஆனால், போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு– கிழக்கு மாகாணங்கள் அத்தகைய வருமான மட்டத்தில் இல்லை என்பது கண்கூடு.

இதனை மத்திய வங்கியின் அதிகாரியும் அண்மையில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

வடக்கு –கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 மாவட்டங்களே இலங்கையின் வறுமைப் பட்டியலில் முதல் 5 இடங்களிலும் இருக்கின்றன என்று மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர்.சிறிபத்மநாதன் தெரிவித்துள்ளார்.

புள்ளி விவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களை மேற்கோள்காட்டியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அந்தத் தகவல்களின்படி கிளிநொச்சி மாவட்டமே பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் முறையே அடுத்து வரும் 4 இடங்களையும் பிடித்துள்ளன.

வறுமை தாண்டவமாடும் இந்த மாவட்டங்களில் தான் அதன் பக்க விளைவுகளான நுண்கடன் தொல்லை, போலி நாணயங்களின் புழக்கம் என்பனவும் அதிகமாக உள்ளன என்று சிறிபத்மநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு –கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரப் பின்னடைவுக்குப் போர் ஒரு முக்கிய காரணம் என்றால், அதேயளவுக்கு முக்கிய காரணம், போருக்குப் பின்னரான சூழலிலும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்களை கொழும்பில் மாறி மாறி ஆட்சியிலிருந்த அரசுகள் நடைமுறைப்படுத்தாமையும் தான்.

மகிந்த வடக்கு கிழக்கில் முதன்மையான வீதிகளை அபிவிருத்தி செய்தார். பொருளாதார அபிவிருத்திக்கு போக்குவரத்து மார்க்கங்கள் தான் முக்கியம், அவற்றை அபிவிருத்தி செய்தால் பொருளாதாரம் வளரும் என்று அப்போது காரணம் சொன்னார்கள்.

ஆனால், அதன் பின்னரும்தான் வடக்கு கிழக்கின் 5 மாவட்டங்கள் வறுமையின் பிடிக்குள் சிறைப்பட்டுள்ளன. தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் எவையும் புதிதாகவும் ஆரம்பிக்கப்படவில்லை, ஏற்கனவே இருந்து செயலிழந்து போனவைகளையும் சீர்ப்படுத்தவில்லை.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் கூட பொருளாதார மத்திய நிலையம் போன்ற வியாபார அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள்தான் வடக்கு கிழக்கில் செய்யப்பட்டுள்ளனவே தவிர, பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கோ, நிறுவனங்களுக்கோ, கடல்சார் உற்பத்தி ஆலைகளுக்கோ நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.

அரசின் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் எதிலுமே வடக்கு கிழக்கில் அத்தகைய திட்டங்கள் செயற்படுத்தப்படப் போவதான தகவல் இல்லை.

அப்படியிருக்கும்போது, 2025ஆம் ஆண்டில் வளம்மிக்க இலங்கை என்கிற இலக்குக்குள் வடக்கு– கிழக்கு மாகாணங்கள் எப்படி இயைந்து போகப்போகின்றன?

இலங்கையின் ஏனைய மாவட்டங்களின் மக்கள் மேல் நடுத்தர வருமானத்தை நோக்கி முன்னேறிய பின்னரும், வடக்கு –கிழக்கு மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியவர்களாகத்தான் தொடர்ந்தும் வாழ்வார்களா? கொழும்பு அரசு கட்டாயம் பதில் சொல்லவேண்டிய கேள்வி இது.

- Uthayan