இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீனா! கூட்டு சேரும் மோடி, ட்ரம்ப்

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயற்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நடைபெற்றுவரும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின்போதே இந்த பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசு என கருதப்படும் இந்தியா, இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றுவது தொடர்பில் தமது அதிருப்தியை தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றது.

அத்துடன், பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் சீனா வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் மறைமுக பனிப்போர் ஏற்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தால் ஆசியப் பிராந்தியத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்ச நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் மோடி ஆகியோருக்கு இடையிலான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.