விஜயதாஸவின் பித்தலாட்டம்! எம்.ஏ.சுமந்திரன் பதிலடி

Report Print Murali Murali in அரசியல்

அமைச்சு பதவியை பறிகொடுத்த நிலையில், அரசமைப்பு பேரவை சட்டவிரோதமானது என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பித்தலாட்ட கருத்தொன்றை முன்வைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி அரசமைப்பு பேரவை உருவாக்கத்திற்கான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போது, அந்த பிரேரணையை முன்மொழிந்த ஆறு பேரில் முன்னாள் நீதி அமைச்சர் இருந்த விஜயதாஸவும் ஒருவர்.

அந்த வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கான இந்த பொறிமுறையை ஏற்படுத்தியவர்களில் தானும் ஒருவர் என்பதை முன்னாள் நீதி அமைச்சர் தற்போது மறந்துவிட்டார்.

மேலும், அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் 21 உறுப்பினர்களில் அவரும் ஒருவர். அரசமைப்பு வழிநடத்தல் குழு 73 தடவைகளுக்கு மேல் கூடியுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட கூட்டங்களில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

அத்துடன், இடைக்கால அறிக்கையின் ஒரு பகுதியை வரைந்தவரும் அவர்தான். விஜயதாஸ ராஜபக்ச சட்டத்துறையில் இரண்டு கலாநிதி பட்டங்களை பெற்றவர். நீதி அமைச்சராக இருந்து அரசமைப்பு பேரவையின் செயற்பாட்டை முன்னெடுத்தவர்.

அரசமைப்பு பேரவை தொடர்பில் இவ்வளவு நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றவர் தற்போது, அரசமைப்பு பேரவை சட்டவிரோதமானது என கூறுகின்றார்.

நீதி அமைச்சர் பதவி பறிபோனமை காரணமாகவே இவ்வாறு பித்தலாட்ட கருத்தை முன்வைக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையை இல்லாது செய்து, வழிப்படுத்தும் குழுவையும் அதன் அறிக்கையையும் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று கையளித்துள்ள கடிதமொன்றிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.