உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயவிருப்பின் அடிப்படையில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்

Report Print Kamel Kamel in அரசியல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயவிருப்பின் அடிப்படையில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நானோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ போட்டியிடப் போவதில்லை.

எனவே உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் விரும்பியவாறு போட்டியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

முரண்பாடுகள் பிளவுகளினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பலவீனமடையும்.

போட்டியிடும் வேட்பாளர்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரும்பியவாறு போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.

மக்கள் இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.