முதலமைச்சர் விக்னேஸ்வரன் கற்றுக்கொண்ட பாடம்!

Report Print Samy in அரசியல்

தற்போது ஆட்சியில் உள்ள அரசைப் பதவிக்குக் கொண்டு வந்ததில் தமிழர்களின் பங்களிப்பு மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, போர்க்குற்றங்களுக்கான நீதி, பரிகாரம் என்பவற்றின் அடிப்படையில், அரசிடம் இருந்து சில எதிர்பார்ப்புகளுடன் தமிழர்கள் தற்போதைய கூட்டு அரசுடன் கைகோர்த்தார்கள்.

இந்த மக்கள் ஆணையின் அடிப்படையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசுடன் இணைந்து பணியாற்றுகின்றது.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் தரப்பின் பங்காளியாகவே இயங்க வேண்டியிருப்பதன் நிர்ப்பந்தம் அதுதான்.

இந்த நிலைப்பாடுதான் எல்லோராலும் கூட்டமைப்பு நிர்ப்பந்திக்கப்படவும் காரணமாக இருக்கிறது. பாம்பென்று அடிக்கவும் முடியாது, புழுவென்று மிதிக்கவும் முடியாத ஒரு நிலை.

ஆனால், கடந்த காலங்களில் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரே கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் வந்தனர். அவர்களில் முக்கியமானவராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் குறிப்பிடலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமான உறவின் தற்போதைய போக்கைத் தொடர்ந்தும் குறை சொல்லி வருபவராக இருந்தார் அவர்.

அந்தப் போக்கில் குறை கண்டதனாலேயே கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுடைய ஒருவராகவும் கடந்த சில வருடங்களாக தன்னை அவர் மக்கள் முன் நிறுத்தி வந்தார்.

அரசு சொல்வதற்கெல்லாம், அல்லது அரசு விரும்புபவற்றுக்கு எல்லாம் கூட்டமைப்புத் தலைவர்கள் தலையாட்டிக் கொண்டிருக்கக்கூடாது என்று விமர்சித்தார். பதிலாக எமக்கு இதுதான் வேண்டும் என்று அவர்கள் உறுதியாக அரசுடன் முரண்பட்டு நிற்க வேண்டும் என்றார்.

உடனடியாகக் கவனிக்க வேண்டிய பல விடயங்களில் கூட்டமைப்பின் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை, வலியுறுத்தல்களை அரசு கண்டுகொள்ளாமல் நகர்ந்த போது கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போதுள்ளதை விடக் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், இன்னும் தீவிரமாகக் கடுமையாக அரசுடன் முட்டிமோத வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தனது உரைகளில் எடுத்துரைத்தார்.

ஆனால், கூட்டமைப்பை அப்படி வெளியிலிருந்து விமர்சிக்க முடிந்த விக்னேஸ்வரனால் அத்தகையதொரு நிலமை, சூழல் தனக்கு ஏற்பட்டபோது அந்த இடத்திலிருந்து நழுவத்தான் முடிந்திருக்கிறதே தவிர, முடிவெடுக்க முடிந்திருக்கவில்லை.

அண்மையில் நடந்து முடிந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில், கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் விதத்தில் அதிலுள்ள கட்சிகள் நடந்து கொள்ளக்கூடாது என்ற சாரப்பட அவர் ஆற்றிய உரையை அங்கிருந்த ஈ.பி.ஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும், தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எதிர்த்த போது கூட்டத்திலிருந்தே நழுவிச் சென்று விட்டார் முதலமைச்சர்.

அதன் பின்னர் தொடர்ந்து நடந்த பேரவையின் கூட்டத்தில் பேரவையின் இணைத் தலைவர்களான முதலமைச்சரும் கிழக்கு மாகாணப் பிரதிநிதியும் தெரிவித்த கருத்துக்களுக்கு மாறான ஒரு முடிவு எடுக்கப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்டது.

பேரவையின் அப்படிப்பட்ட முடிவு ஏற்புடையது அல்ல என்று முதலமைச்சர் வெளியிலிருந்து முதலில் கருத்துத் தெரிவித்தார்.

பின்னர் பேரவையின் அறிக்கை வெளியானதை அடுத்து அதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்று அவரிடம் இருந்து வெளிவரும் என்று சொல்லப்பட்டது.

இந்தத் தகவலை அடுத்து அவரைச் சந்தித்த பேரவைப் பிரதிநிதிகள் இரவிரவாக அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

அதனை அடுத்து நேற்று அவர் விடுத்த கேள்வி பதில் அறிக்கையில் தனது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறான ஒரு கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.

கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டிய நேரத்தில் அதனை உடைக்கப் பார்க்கிறார்கள் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனை விமர்சித்தவர், நேற்றைய அறிக்கையில் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையின்படி நடந்து கொள்ளாததே அது உடைவதற்கான காரணம் என்று தெரிவிக்கிறார்.

இப்படித் தான் சார்ந்துள்ள ஒரு மிகச் சிறிய அமைப்புக்குள்ளேயே தனது நிலைப்பாட்டை ஆணித்தரமாகச் சொல்லி அந்த அமைப்பை வழிக்குக் கொண்டு வர முடியாது, அதன் நிலைப்பாட்டுக்கு அமைவாக இரு நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை மாற்றும் முதலமைச்சர், 60 வருடங்களுக்கும் மேலான ஒரு போராட்ட வரலாற்றைக் கொண்ட பிரச்சினையில்- அதன் ஒரு வரலாற்றுத் தருணத்தில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மட்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவுகளையும் எடுத்து அரசுக்கு எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்.

அரசியல் என்பது தலைவர்கள் விரும்பும் முடிவுகளை எடுக்கும் களம் மட்டுமல்ல, அது சூழலையும் தேவைகளையும் பொறுத்து முடிவெடுக்கப்படும் இடம் என்பதை முதலமைச்சர் இப்போது, இந்தப் பாடத்தில் இருந்தாவது புரிந்து கொள்வார் என்று நம்பலாம்.

newuthayan