யாழ். கோட்டையில் இராணுவத்தினர்! வாள் வெட்டு தொடர்பில் ஆளுநர் எடுத்துள்ள முடிவு

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து, பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்து நிலைமையை சீர்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளில் மக்களுடைய இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்கும் படையினரை யாழ். கோட்டைக்குள் முகாம் அமைத்து தங்கவைக்க ஆளுநர் யோசனை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இது தொடர்பிலான யோசனையை அனுப்பிவைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதன்போது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியை அவர்கள் வழங்குவார்களா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ். கோட்டையில் போர்த்துக்கீசர்கள், பிரித்தானியர்கள், இலங்கை இராணுவம், புலிகள் எனப் பலர் இருந்தார்கள்.

அப்போது எங்கே சென்றீர்கள்? எனக் கேள்வி எழுப்பிய ஆளுநர், யுத்தம் முடிந்து விட்டது என்பதால் எல்லாவற்றையும் துடைத்து எடுப்பதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், வடமாகாணத்தில் சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கான கௌரவிப்பு ஒன்றை செய்யவுள்ளதாக கூறியிருக்கும் வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே மக்களுக்கான சிறந்த சேவையை வழங்கியவர்கள் விண்ணப்பங்களை செய்யுமாறும் கேட்டுள்ளார்.

விவசாயம், அரச சேவை, சமூகசேவை போன்ற பல்வேறு துறைகளில் சேவையாற்றியவர்கள் இதன்போது கெளரவிக்கப்படுவார்கள்.

குறிப்பாக லயனஸ் பெர்னான்டோ என்ற அரசாங்க அதிபர் தெற்கில் இருந்து வந்து இங்கே சிறந்த சேவையாற்றினார். அவ்வாறானவர்கள் இதில் கௌரவிக்கப்படுவார்கள்.

வடமாகாணத்தின் சகல பிரதேச செயலகங்களிடம் இருந்து சிபாரிசுகள் பெறப்பட்டு இறுதியாக அரசாங்க அதிபர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் இன, மத பேதம் பார்க்கப்படாமல் இந்த கௌரவிப்பு நடக்கவுள்ளது.

எனவே சிறந்த சமூக சேவகர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆளுநர் மேலும் கேட்டுள்ளார்.