காலியாகிறது ஈ.பி.ஆர்.எல்.எவ் கூடாரம்! அடுத்தடுத்து கட்சித் தாவல்கள்?

Report Print Nakkeeran in அரசியல்

வடமாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில் நேற்று அவர் இணைந்து கொண்டார்.

வடமாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய துரைராசா ரவிகரன் இதுவரை சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து மாற்றுத் தலைமை கோரிவரும் சுரேஸ் பிரேமச்சந்திரன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் கஜேந்திரகுமாருடன் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கி போட்டியிடப் போவதாகவும் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை தமிழரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துள்ளது.

குறித்த உறுப்பினர் ஓர் நெருக்கடியான கட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பால் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தெல்லிப்பளைத் தொகுதி அலுவலகத்தில் வைத்து கட்சியின் தலைவரிடத்தில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து முறைப்படி தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த மூவர் அக்கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் இணையவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் தமிழரசுக் கட்சியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணையவுள்ளதாக தெரிவித்த காரணத்தினாலேயே இந்த கட்சித் தாவல்கள் இடம்பெறுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.