உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் இருக்கின்றோம்

Report Print Kumar in அரசியல்

முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடி போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் இருப்பதை யதார்த்தமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சியில் இந்த நாட்டில் யார் பிழை செய்தாலும் விசாரணை நடத்தப்படும் நிலைமை அதிகரித்துள்ளதையே ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதமர் ஆஜராகியுள்ளது வெளிப்படுத்துகின்றது.

இன்று இருபெரும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ள வேளையில் தமிழ்பேசும் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இது இருக்கின்றது.

நாங்கள் போராட்டக்களத்தில் இருந்துவந்த சமூகம், காலணித்துவத்திற்கு பின்னர் பல்வேறு போராட்டங்களை கண்டவர்கள் இன்று அரசியல் போராட்டத்தின் சென்றுகொண்டுள்ளோம்.

இழப்புக்களை சந்தித்த இனத்திற்கு ஒரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிரந்தர அரசியல் தீர்வினை தமிழ் மக்களுக்கு எழுத்து மூலம் வழங்குவதற்காக அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் முன்னோடியாக இடைக்கால அறிக்கையொன்று வந்துள்ளது, அது தமிழ் மக்களுக்கு முற்றுமுழுதாக சாதகமான அறிக்கையென்று சொல்ல முடியாது. சிலர் சாதகமான இருப்பதாக கூறலாம், ஆனாவல் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

பல விடயங்கள் திருத்தப்படவேண்டும், பல விடயங்கள் புகுத்தப்படவேண்டும், எனினும் புதிய அரசியல் அமைப்பு ஊடாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வொன்றினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள மிக முக்கியமான கட்சிகள் இரண்டு இணைந்துள்ள நிலையில் நாங்கள் இராஜதந்திரமாக செயற்பட்டு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் இந்த தீர்வினை குழப்பும் வகையில் தீர்வுத்திட்டத்தினை இல்லாமல் செய்யும் வகையில் தென்னிலங்கையில் பல இனவாத அமைப்புகளும், மதவாத அமைப்புக்களும் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரும் மிகவும் கடுமையான வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்ச சார்ந்த கட்சி வெற்றிப்பெறுமானால் இன்றுள்ள அரசியல்போக்கு தடைப்படும் நிலை ஏற்படலாம்.

அதனால்தான் மிக விரைவில் தீர்வினை பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கடந்த ஆட்சிக்காலத்தில் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தன, பலர் கடத்தப்பட்டனர். இன்று அந்த நிலைமை மாற்றம் பெற்றுள்ளது.

எனினும் இந்த நிலைமை இன்று அதிகரிக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.

இன்று தீர்வுத்திட்டம் தொடர்பில் அதனை கைவிடுமாறு கோருபவர்கள் மாற்றுத்திட்டம் எதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகும்.

இன்றுள்ளது போன்றதான அரசியல் சூழ்நிலை மீண்டும் ஏற்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

நாங்கள் மீண்டும் ஆயுதம் தூக்கிப்போராடுவதா? புலம்பெயர் நாடுகளில் உள்ள சிலர் மீ்ண்டும் போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு கோருகின்றனர்.

அவ்வாறு என்றால் அவர்களின் பிள்ளைகளை இங்கு போராட அனுப்பி வைப்பார்களா என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன். நாங்கள் எங்கள் சமூகத்தினை எக்காரணம் கொண்டும் அழிவுப்பாதைக்கு கொண்ட செல்ல முடியாது.

நாங்கள் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் எமது சமூகத்தினை மேல்நிலைக்கு கொண்டுவரவேண்டும், அதற்கான கூடுதலான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடி, போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை, ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் இருப்பதை யதார்த்தமாக நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers