புதிய தேசியக் கொடியை உருவாக்குவது குறித்து ஆராய சந்தர்ப்பம்!

Report Print Samy in அரசியல்

வடமாகாணக் கல்வி அமைச்சர் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என்ற விடயம் இப்போது பூதாகாரமாக்கப்பட்டு வருகின்றது.

தமிழர்களின் இனவாதம் என்று இதனை வர்ணித்திருக்கிறது ஜே.வி.பி.

அதேபோன்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஒரு மிகப் பெரிய விடயம் என்பதாகத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

வடக்கிலும் இனவாத மனோநிலை உருவாகியுள்ளது.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருக்கின்றார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தவேண்டும். தேசியக் கொடி தொடர்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம்.

இருந்தாலும் தற்போதுள்ள தேசியக் கொடி தான் அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க.

வட மாகாணக் கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுக்கும் நிலையிலும், வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மக்களைக் கொதிப்படையச் செய்யும் வகையில் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில்,

எப்படி நாம் ஜனாதிபதியினதும் ஆளுநரினதும் அதிகாரங்களைக் குறைப்பது? எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்ந்து இருக்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்லது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்ற மறுத்தது தவறு தான் என்று தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.

தனது அதிருப்தியை வேறு வழியில் அமைச்சர் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தேசியக் கொடியை ஏற்ற மறுப்பது போலித் தேசியம் என்று விமர்சித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

உண்மையில் இப்படியெல்லாம் கொதித்தெழுந்து பிரச்சினைப் படத்தக்க ஒரு விடயமா இது?

இலங்கையின் தேசியக் கொடி பன்மைத்துவதைப் பறைசாற்றுவதாக இல்லை என்பதும் சிங்களத்தின் வழித்தோன்றல்கள் சிங்களவர்கள் என்கிற நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதும் எல்லோராலும் விமர்சிக்கப்பட்டு வருவதே!

அதிலும் இனப் பிரச்சினை ஆயுத மோதலாகப் பரிணமித்ததன் பின்னர் தேசியக் கொடி பற்றிய இந்த விமர்சனம் இன்னும் பலம் பெற்றது. சிங்கக் கொடிக்குப் பதிலீடான புலிக்கொடியும் கூட தமிழர்களின் தேசியக் கொடியாக இருந்த காலமும் உண்டு.

இவ்வாறு தனக்கு உடன்பாடில்லாத ஒரு தேசியக் கொடியை ஏற்ற மறுப்பதென்பது எப்படி அந்தக் கொடியை அவமரியாதை செய்வதாகும்?

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் அந்தக் கொடியை யாருமே ஏற்றக்கூடாது என்று மறிக்கவில்லை, கொடியைக் கிழிக்கவோ கசக்கவோ இல்லை, அதற்கெதிராகக் குரல் எழுப்பவில்லை என்னும் போது இலங்கையின் தேசியக் கொடி எப்படி அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டது?

இன்னும் சொல்லப்போனால், தேசியக் கொடி வேறு ஒருவரால் ஏற்றப்படும் போது அதற்குரிய மரியாதையை வழங்கிய படியே அங்கு நின்றிருந்தார் மாகாணக் கல்வி அமைச்சர். அப்படியிருக்கும்போது அவர் தேசியக் கொடியை அவமரியாதை செய்தார் என்பது எப்படிச் சரியானதாகும்?

கொடியை ஏற்றுவதும் விடுவதும் தனிமனித சுதந்திரத்துடன் தொடர்புடைய விடயமில்லையா?

தேசியக் கொடியை ஏற்றக் கூடியவர்கள் அல்லது ஏற்றக் கூடாதவர்கள் என்று அரசமைப்பு திட்டவட்டமான வரையறை எதனையும் தராத போது, மாகாண அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்றித்தான் ஆக வேண்டும் என்பது என்ன கட்டாயம்?

தனக்கு உடன்பாடில்லாத ஒரு கொடியை, தான் ஏற்றாமல் மற்றொருவர் அதனை ஏற்ற இடமளித்து ஒதுங்கி நிற்பது தேசியக் கொடிக்கு அவமதிப்பு, அரசமைப்புக்கு அவமதிப்பு என்றால், தற்போதிருக்கும் அரசமைப்பு இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமற்றது என்று கூறிப் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்க எடுக்கப்படும் முயற்சி மட்டும் அரசமைப்பு அவமதிப்பாக அமையாதா?

தெற்கிலே தொடர்ந்து கிளர்ந்து எரியும் இனவாதத் தீக்கு நிகராக வடக்கிலும் இனவாதம் கொழுந்து விட்டெரிகிறது என்று காட்டுவதற்கு இது போன்ற சிறு சிறு தனிமனிதக் கொள்கைகளைப் பயன்படுத்துவதை விட்டு, உண்மையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஏற்ற மறுக்கும் விதத்தில் அமைந்துள்ள தேசியக் கொடியின் வடிவத்தை அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வடிவத்துக்கு மாற்றுவது குறித்து ஆராய்வதே காலப் பொருத்தமானது.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் போது அனைத்து மக்களையும் பிரதிபலிக்கும் வகையிலான புதிய தேசியக் கொடி ஒன்றையும் உருவாக்குவது குறித்து ஆராயப்பட வேண்டும்.

newuthayan