சம்பந்தனின் கருத்து வரவேற்கத்தக்கது: முன்னாள் பிரதி அமைச்சர்

Report Print Kalkinn in அரசியல்

அரசியல் கைதிகள் சம்மந்தமான எதிர்க்கட்சித் தலைவரர் சம்பந்தனின் கருத்து வரவேற்கத்தக்கது என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

இன்றைய நல்லாட்சி என்று சொல்லப்படும் நல்லாட்சிக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான அரசியல் கைதிகளின் விடுவிப்பு துரிதப்படுத்தப்பட வேண்டும்.

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதமருடனான சந்திப்பை ஏற்படுத்தி அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக பேசப்பட வேண்டும் என கூறியமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

கடந்த கால அரசாங்கத்தின் போது 12,000இற்கும் அதிகமான நேரடி விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பின்பு புணர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இருப்பினும் நேரடி விடுதலைப் புலிகள் அல்லாத சந்தேகத்திற்கிடமாக கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை கடந்த அரசாங்கம் விடுவிக்கவில்லை.

இதனை மையமாக வைத்து அவர்களது விடுதலையை பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் புதிய அரசாங்கத்தை தமிழ் மக்கள் உருவாக்கினார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு வருட காலமாக எடுத்து வந்த முன்னெடுப்புகள் போதுமானதாக இருக்கவில்லை.

உண்ணாவிரதங்களை முடித்து வைப்பதிலும் அரசியல் கைதிகளை சென்று பார்வையிடுவதிலும் ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

மாறாக ஜனாதிபதி பிரதமரிடம் நேரடியாக பேசி ஒரு காலவரையை உருவாக்கி அதற்குள் இவர்களது விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும்.

இதனையே இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் செயல்படுத்த முனைகிறார் என்று தெரிகின்றது. இதனை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.

வரவேற்கும் அதே நேரத்தில் ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களும் இம்முயற்சிக்கு கரம் கோர்க்க வேண்டும். இதுவே கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பமாகும்.

இம்முயற்சி கைகூடாவிடின் அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையோ உண்ணாவிரதத்தையோ முன்னெடுக்க வேண்டும்.

எதிர்க்கட்டசி தலைவர் அவர்களும் காலதாமதம் இன்றி ஜனாதிபதி பிரதமருடன் இது சம்பந்தமாக பேசி தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் பெற்றுக் கொடுப்பாராயின் அவரை சரித்திரம் மிக்க ஒரு மனிதராக தமிழ் மக்கள் கருதுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.