நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைத்தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டதா?

Report Print Ajith Ajith in அரசியல்

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய இரகசிய பொலிஸாரினால் மேற்கொண்ட விசாரணைகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் தவறானது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸுடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசியில் உரையாடியதாக ஆணைக்குழுவில் அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைத்தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதா என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், குறித்த கைத்தொலைபேசி உரையாடல்கள் அர்ஜூன் அலோசியஸின் கைத்தொலைபேசியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் என மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதிஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரினதோ அல்லது வேறு தனிநபர்களின் கைத்தொலைபேசி அழைப்புகளோ ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.