புதிய தேசியக் கொடி அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கை: சிவாஜிலிங்கம்

Report Print Sumi in அரசியல்

புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேசியக் கொடி அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தற்போது சர்ச்சையில் எழுந்துள்ள தேசியக்கொடி விவகாரம் தொடர்பாக இன்று யாழில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசியக் கொடியினை ஏற்ற மறுப்புத் தெரிவித்த விடயம் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தேசிய கொடியினை வேறு யாராவது ஏற்றுமாறு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் இதை பெரிதாக்கியுள்ளார். ஒன்றுமில்லாத விடயத்தை பெரிய விடயமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பிரித்தானிய ஆட்சியின்கீழ் இருந்தவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தவாரே பிரிட்டிஷ்க்கு எதிராக குரல்கொடுத்தார்கள்.

இவ்வாறான நிலைமையில் தான் அரசியலமைப்பினையும், தேசியக் கொடியினையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தேசியக் கொடியினை அவமதிக்கவில்லை. தேசியக் கொடியினை கீழே போட்டு மிதிக்கவில்லை. அவர் தேசிய கொடியினை ஏற்ற மறுத்துள்ளார்.

அதை சர்ச்சையாக்கி, சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றார்கள். அந்த சட்ட நடவடிக்கை என்ன என்பதனைப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் 50 மாநில அரசுகள் இருக்கின்ற இடத்தில் கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய கொடியினை எரிப்பதற்கு கூட உரிமை உள்ளதென அந்த நாடு ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறாக தெரியவில்லை. தேசிய கொடியினை ஏற்ற மறுத்ததுதான் என்பது தவறான கருத்து.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு புதிய தேசிய கொடி அமைக்கப்பட வேண்டும். அது வரை இந்த சர்ச்சைகள் நீடிக்கும் 10 லட்சம் பேரின் குடியுரிமையை பறித்தீர்கள். தனிச் சிங்கள சட்டம் கொண்டுவந்தீர்கள்.

சிங்கள குடியேற்றங்களைச் செய்தீர்கள். புதிய அரசியலமைப்பின் மூலம் தொடர்ந்தும் எமது உரிமைகளைப் பறித்தீர்கள்.

ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இதைப் பார்க்க வேண்டும். சிங்கள மக்கள் இதைப் பிரச்சினையாக்கினார்களாக இருந்தால், இந்தப்பிரச்சினை இன்னும் பெரிய பிரச்சினையாக மாறும்.

புதிய அரசியலமைப்பு, புதிய தேசியக்கொடியே ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கை என்றார்.